குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, October 12, 2018

மண்ணில் உதித்த மகான் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

  திருவடியே சரணம் !  மண்ணில் உதித்த மகான் 

       சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ  மாயாண்டி சுவாமிகள்


 


சுவாமிகள் சன்னதிக்கும் சென்று வாருங்கள்.வாழ்வில் மாற்றம் நிச்சயம்

நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .
அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .



மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இந்த ஊருக்குத் தென் திசையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம்- கட்டிக்குளம். மகான்கள் பலர் தங்களது யாத்திரையின்போது இங்கு வந்து தங்கி, கட்டிக்குளத்துக்குப் புனிதம் சேர்த்திருக்கிறார்கள். தவிர, ராமேஸ்வரம் செல்லும் வழியில் கட்டிக்குளம் இருப்பதால், அந்த காலத்தில், பாத யாத்திரையாகச் செல்லும் துறவிகள், சில நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம்.

இந்த ஊரில் சூட்டுக்கோல் ராமலிங்கம் சுவாமிகள் என்ற துறவி வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். இவரின் கையில் எப்போதும் இருக்கும் சூட்டுக்கோல், அபூர்வ சக்தி வாய்ந்தது (இவருக்குப் பின் இந்த சூட்டுக்கோல், இவரின் சீடரான செல் லப்ப சுவாமிகளிடமும் அதன் பிறகு, செல்லப்ப சுவாமிகளின் சீடரான கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளிடம் வந்தது).

கட்டிக்குளத்தில் வசித்த குப்பமுத்து வேளார், ஒரு மண்பாண்டத் தொழிலாளர். உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார். இவர் மனைவியின் பெயர் கூத்தாயி அம்மாள். சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களான இந்தத் தம்பதிக்கு, காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858- ஜூலை) ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மாயாண்டி என்று அவனுக்குப் பெயர் வைத்தனர். ஒரு நாள், சிறுவன் மாயாண்டி யுடன் ஐயனார் கோயிலுக்கு அபிஷேகம் செய்யப் புறப்பட்டார் குப்பமுத்து. மகனை வெளிக் கூடத்தில் உட்கார வைத்து விட்டு, கருவறைக்குள் நுழைந்தார். அபிஷேகத்தை முடித்து விட்டு, வெளியே வந்தபோது மகனைப் பார்த்து அதிர்ந்தார் குப்பமுத்து. கண்களை மூடி குத்துக்காலிட்டு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தான் மாயாண்டி. அவன் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. பயந்து போன குப்பமுத்து, ''ஐயனாரப்பா... என் மகனைக் காப்பாத்து'' என்று அலறினார். சற்று நேரத்தில் அந்த நல்ல பாம்பு எப்படி மறைந்ததோ தெரியவில்லை.

அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.
.

பின்னாளில் இந்த ஐயனார் கோயிலில் மாயாண்டி பூஜை செய்யும் நேரங்களில், இதே நல்ல பாம்பு அவர் மேல் விழுந்து விளையாடும். இதைக் கண்ட ஊர்மக்கள், 'தெய்வத்தின் குழந்தை இவன்' என்று தெரிந்து கொண்டார்கள்.

திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்ட மாயாண்டிக்கு, குல வழக்கப்படி 12-வது வயதில் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்திய சுவடிகளையும், சித்தர் நூல்களையும் படித்தார். அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மனை தரிசிப்பார். இந்த நிலையில் புளியங்குடியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் மீனாட்சி, இவருக்கு மனைவியாக அமைந்தாள். ஒரு மகளும் மகனும் பிறந்தனர். அதன் பின் தவ வாழ்க்கையின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் மாயாண்டி. 


சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.




குரு செல்லப்ப சுவாமிகள்

 
மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார்

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்
 
ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.
சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .



சட்டையைக் கழற்றிவிடலாமா?
 
நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் 

 
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார்


துரையில் இருந்து மானாமதுரை செல்லும் ரயிலில் ஒரு முறை ஏறிய மாயாண்டி சுவாமிகள், அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். ரயில் புறப்பட்டு சில நிமிடங்கள் ஆன பிறகு, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

 இவர் வெள்ளைக்காரர். பயணச் சீட்டுக்காக சுவாமிகளை அழைத்துப் பார்த்தார். ம்ஹும்! பதில் இல்லை. குரலை சற்று உயர்த்திப் பார்த்தார். அதற்கும் பதில் இல்லை. எனவே, கொஞ்சம் எரிச்சலானவர் தன் கையில் இருந்த பென்சிலால் அவர் மேல் தட்டினார்.

 கண்விழித்துப் பார்த்த சுவாமிகளிடம், பயணச்சீட்டு தருமாறு கேட்டார். அவரைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள், மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
பரிசோதகர் முகம் மாறினார். 'இந்த பரதேசியை எப்படியாவது தண்டித்து விட வேண்டும்' என முடிவெடுத்தார். ரயில், வனாந்திரப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தினார். பிறகு, தியானத்தில் இருந்த சுவாமிகளின் மேல் பென்சிலால் இரண்டு தட்டு தட்டி விட்டு, ''ம்ம்ம்... இறங்கு கீழே'' என்றார் மிகுந்த அதிகாரமாக. உடன் இருந்த மற்ற பயணிகள்
திகைத்தனர். காரணம்- அவர்களில் பலரும் மாயாண்டி சுவாமிகளை ஓரளவேனும் அறிந்திருந் தனர். எனவே, டிக்கெட் பரிசோதகரின் செயலைக் கண்டித்தனர்.


ஆனால், அவர் இதை ஏற்கவில்லை. ''உடம்பில் துணி எதுவும் இல்லாமல் தன் இஷ்டத்துக்குத் திரியும் காட்டுமிராண்டி ஆசாமிகளுக்கு இது போன்ற இலவச ரயில் பயணம் தேவைதானா?'' என்று சகட்டு மேனிக்கு திட்டினார். சுவாமிகள் ஏதும் பேசவில்லை. என்ன நடக்கிறது என்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உடன் இருந்த பயணிகள், ''எங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை விடுவியுங்கள். இங்கே அவரை இறக்கி விடாதீர் கள். அடுத்த ரயில் நிலையத்திலாவது இறக்கி விடுங்கள். இது அடர்ந்த வனப் பகுதியாக இருக்கிறது.'' என்றனர்.

ஆனால், டிக்கெட் பரிசோதகர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். சுவாமிகளைப் பிடித்து வலுக் கட்டாயமாக இறக்கினார் நிலைமையை உணர்ந்த சுவாமிகளும், கீழே குதித்து வனத்தை நோக்கி நடந்தார். ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, தியானத்தைத் தொடர்ந்தார்.

பயணிகள் வருத்தத்துடன் அவரை பார்த்தனர், 'இந்தக் காட்டிலேயே விட்டு விட்டுப் போகிறோமே' என்று. அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார் சுவாமிகள். 'நடக்கப் போகிற அதிசயத்தைப் பாரடா' என்பதே அதன் அர்த்தம்!

ரயில் புறப்படுவதற்காக விசில் ஊதப்பட்டது. பச்சைக் கொடி காட்டப்பட்டது. ஆனால், ரயில் கொஞ்சமும் நகரவில்லை. ரயிலில் இருந்த ஊழியர்கள் குழம்பினர். இன்ஜின் முதற்கொண்டு அனைத்தையும் பரிசோதித்தனர். எதிலும் கோளாறு இல்லை. அந்த ரயிலில் இருந்த ஒரே ஒரு ஊழியர் மட்டும் காரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து விட்டார். 'சுவாமிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதுதான் குறை. அவர் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது. அவர் வண்டியில் ஏறி அமர்ந்தால், நகர ஆரம்பித்து விடும்' என்றார். இவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே, ஒருசில பணியாளர் களும் பயணிகளும் சேர்ந்து, சுவாமிகள் தவம் இருந்த ஆல மரத்தின் அருகே சென்றனர். சுவாமிகள் கண் திறந்தார். வந்தவர்கள் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து, ''என்ன அப்பு... வண்டி மானாமதுரைக்குப் போக ணுமா?'' என்று கேட்டார் சுவாமிகள்.

அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தலையசைக்க... உடனே விறுவிறுவெனச் சென்று ரயிலில் அமர்ந் தார் சுவாமிகள். அடுத்த விநாடி, அது என்ன மாயமோ தெரியவில்லை. எந்த வித தடங்கலும் இன்றி புறப்பட்டது ரயில். மானாமதுரை வந்ததும், சுவாமிகள் இறங்கிக் கொண்டார். அப்போது அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் இவரை நோக்கி ஓடோடி வந்து காலில் விழுந்து, மன்னிப்பும் கேட்டார். பிறகுதான், வெள்ளைக்காரர்கள் காலத்தில் ராமேஸ்வரம் வரை செல்லும் சாதுகளுக்கு ரயிலில் இலவச அனுமதி வழங்கப்பட்டது. அதற்குக் காரணம்... சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்.

மாயாண்டி சுவாமிகள் அமைத்த வெள்ளிக் குறிச்சி நரிவள்ளிமடத்தில், பெத்தார் என்பவர் தினமும் மாலை வேளையில் விளக்கேற்றுவது வழக்கம்.ஒரு நாள் அவர், விளக்கேற்ற சென்றபோது கடும் மழை பெய்தது! உரிய நேரத்தில் விளக்கேற்ற வேண்டுமே என்ற அவரசத்தில் மழையையும் பொருட்படுத்தா மல் விரைந்தார்.

வழியில் ஒரு கால்வாயைக் கடக்க நேர்ந்தது. அப்போது பாம்பு ஒன்று, பெத்தாரைத் தீண்டியது. உடலில் விஷம் ஏறுவதையும் பொருட் படுத்தாமல், ஓட்டமும் நடையுமாகச் சென்ற பெத்தார், மடத்தை அடைந்து மாயாண்டி சுவாமிகளைப் பிரார்த்தித்தபடி திருவிளக்கு ஏற்றி வைத்தார்.

மெள்ள நடந்து வெளியே வந்தபோது அவரை மயக்கம் ஆட்கொண்டது. மடத்தின் ஒரு மூலை யிலேயே அப்படியே சரிந்தார். ஆனால், அவருக்கு வேறு எதுவும் நேரவில்லை! மறுநாள் அவர், சுவாமிகளை தரிசித்தபோது... மாயாண்டி சுவாமி களின் திருக்கரத்தில் ஒரு கட்டு! இதைக் கண்டதும் குழம்பிப் போன பெத்தார், ''பாம்பு... நேத்து இரவு...'' என்று இழுத்தபோது, சுவாமிகள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு, ''கவலைப் படாதே. விஷம் இறங்கி விட்டது'' என்றார்

அப்போதுதான் பெத்தாருக்குப் புரிந்தது, தன்னைத் தீண்டிய பாம்பின் விஷத்தை சுவாமிகளே ஏற்றுக் கொண்டார் என்று.ரு முறை, குன்றக்குடியில் குடி கொண்ட முருகப் பெருமானின் திருத்தேர் உலா வைபவம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது மாயாண்டி சுவாமிகள் அங்கிருந்தார். திடீரென தேரில் மளமளவென ஏறியவர், முருகப் பெருமானின் உற்சவர் விக்கிரகம் இருந்த இடத்தின் அருகே நின்று பழனியாண்டவராகப் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்தார்.

சுவாமிகளைப் பற்றி அறிந்திருந்த பக்தர்கள், அவரின் திருக்கோலம் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தனர். ஆனால், சுவாமிகளைப் பற்றி அறிந்திராத பக்தர்கள் இந்த நிகழ்வு கண்டு கொதித்தனர்.

'யார் இந்தப் பரதேசி? தேரிலேயே ஏறி வருகி றானே... என்ன திமிர் இவனுக்கு?' என்று கோபம் கொப்பளிக்க தேரின் அருகே வந்தனர். சுவாமி களை வலுக்கட்டாயமாகத் தேரில் இருந்து இறக்கி விட்டனர்.

அதன் பின் 'முருகப் பெருமானுக்கு அரோஹரா' என்று கோஷமிட்டபடி தேரை இழுக்கத் தொடங்கினர் பக்தர்கள். ஆனால், தேர் நகர மறுத்தது. இன்னும் அதிக பக்தர்கள் சேர்ந்து மீண்டும் தேரை இழுக்க முற்பட்டனர். ஊஹும். தேர் அசைந்து கொடுக்கவில்லை!

அதன் பிறகே, சில பக்தர்களுக்கு விஷயம் புரிந்தது. மாயாண்டி சுவாமிகளை சிலர் அவமதித்து விட்ட நிகழ்வை அறிந்தனர். உடனே, மாயாண்டி சுவாமிகளை அந்தக் கூட்டத்தில் தேடினர். அவர், ஒரு பாறையில் கற்றாழைச் செடி மீது வடிவேலனாக படுத்திருந்த கோலத்தில் காட்சி தந்தார்.

 அவர் அருகே நெருங்கி வணங்கினர். பிறகு, 'தேர் நகர்வதற்கு சுவாமிகள் அருள் புரிய வேண்டும்' என்று கேட்டுக் கொண் டனர். அத்துடன், சுவாமிகளை அவமதித்த பக்தர்களும் அங்கு வந்து, தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர்.
புன்னகைத்தவாறே மாயாண்டி சுவாமிகள் அங்கிருந்து எழுந்தார். அனைவரும் சுவாமிகளை அழைத்து வந்தனர். தேர் வடத்தின் மீது சுவாமிகள் கை வைத்து இழுக்க... பக்தர்களின் கரகோஷத்துடன் தேர் அசைந்தாடி அழகாக நகர்ந்தது.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலைத் தரிசிப்போமா? 'சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்' என்று அழைக்கப்படுகிறது இந்த இடம். ராமநாதபுரம் அரண்மனைக்கு ராமலிங்க விலாசம் என்று பெயர். அதற்கு ஈடான சிறப்பு இங்கு இருக்க வேண்டும் என்பதற்காக சுவாமிகள் அதே பெயரை வைக்கச் சொன்னாராம்.

ஏராளமான சித்தர்கள் வசித்து, தவம் புரிந்த இடம்- திருக்கூடல் மலை. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்த மலையில் ஏராளமான சமாதிகள் உள்ளன.

பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அபிஷேக- ஆராதனைகள் சிறப்பாக இருக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை கேட்டை நட்சத்திரத்தன்று (நவராத்திரி காலம்) சுவாமிகளின் குருபூஜை நடைபெறும். அந்தத் தினத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் பேர் வந்து தரிசித்துச் செல்வார்களாம். அவரது திருவுருவப் படத்துக்கு பூக்களால் அலங்காரம் செய்து வீதியுலா வருவார்கள்.

இதே தினத்தன்று ஆழ்வார்த் திருநகரி மற்றும் மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகள்... தவிர, சுவாமிகளின் அனைத்து மடங்களிலும் அன்னதானமும் குருபூஜையும் நடை பெறுகின்றன.

சித்தர்களுக்கும் மகான்களுக்கும் ஏது நிரந்தர வாசம்? பக்தர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று அருள் புரிவதுதான் இவர்களின் சேவை!
இந்த அண்ட சராசரமே இவர்களது அருளாட்சிக்கு உட்பட்டவைதானே? அதனால்தானோ என்னவோ, மாயாண்டி சுவாமிகளுக்கு ரங்கூனிலும் ஒரு மடம் நிறுவப்பட்டு அங்கும் தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

கட்டிக்குளம் அருள்மிகு சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் 88ம் ஆண்டு குருபூஜை விழா கட்டிக்குளத்தில்  திருக்கோயிலில் 14.10.2018  அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.