மேலப்பூங்குடி குலாலர் சங்கம் இராமர் தேர் திருவிழா காரைக்குடி : மரத்தால் மட்டுமே தேர் செய்யப்பட்டு வந்த நிலையில்,காரைக்குடியை சேர்ந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ரகுமத்துல்லா என்பவர், இரும்பிலான தேரை, மேல பூங்குடியை சேர்ந்த "குலாலர்' சமுதாயத்தினரின் பஜனைக்காக செய்து கொடுத்துள்ளார்.
ராஹிலா இன்ஜி., ஒர்க்ஸ் உரிமையாளர் ரகுமத்துல்லா கூறும்போது: இதற்கு முன்பு தேர் செய்ததில்லை.ஒரு முயற்சியாகத்தான் இறங்கினோம்.நான்கு பேர்,ஒரு மாதம் சேர்ந்து தேரை உருவாக்கினோம்.எனது நண்பர் கருணாநிதி,சங்கர் உதவி செய்தனர்.
இதற்காக 2 டன் இரும்பு தகடு தேவைப்பட்டது.
கோபுர ஆர்ச் பகுதியில், 20 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள பீடத்தில், சுவாமி சிலையை வைத்து கொண்டு, உள்ளே இருவர் அமரலாம். ராமரை பஜனை செய்து செல்வதற்காக தேர் செய்யப்பட்டதில் மகிழ்ச்சியே.
மேலப்பூங்குடி ரத்தினம் கூறியதாவது: எங்கள் பகுதி இளைஞர்களின் முயற்சியால் இந்த தேர் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகியுள்ளது. புரட்டாசி மாத பஜனையின்போது, ராமர் சிலையை இதில், வைத்து ஊருக்குள் இழுத்து செல்வோம். ஏற்கனவே மாட்டு வண்டியில், ராமர் சிலை வைத்து பஜனை செய்தோம்.தற்போது இரும்பிலான தேர் செய்துள்ளோம்,என்றார்