இறைவன் எனும் குயவன். வடித்த சிலை. மனிதன்..
காலச் சக்கரம் சுழன்றதடா!
கைகள் மண்ணைப் பிசைந்தனடா!
ஆழியின் நடுவில் வைத்திடப் பல
ஆயிரம் பானை உதித்தனடா!
குயவன் மனம்விதம் மாறியதில்
குழைக்கும் கைகள் கோணுவதில்
உயர்ந்தும் சிறுத்தும் ஒழுங்கற்றும்
உருவம் கோடி உதித்தனடா!
கறுத்தி ருந்தன சில பானை!
கவினோ டிருந்தன சில பானை!
பருத்தி ருந்தன சில பானை!
பால்போல் இருந்தன சில பானை!
வெளுத்த பானை கறுத்த வற்றை
விரட்டி அடித்தன வேடர்களாய்!
பலத்த பானை மெலிந்த வற்றை
பணிய வைத்தன வேந்தர்களாய்!
அழகிய பானை ஆனாலும்
அங்க போன தானாலும்
நழுவிக் கீழே விழுந்தால் மீண்டும்
நைந்த மண்ணாய்ப் போகுமடா!
வானவில் போன்ற வாழ்க்கைதனில்
வளர்பிறை பின்பு தேய்பிறையே!
ஊன முற்ற மனித இனம்
ஓயாச் சண்டையில் மாய்வது ஏன்!
No comments:
Post a Comment