உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களே இதுவரை நுண்ணலை அடுப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ""உடலுக்குத் தீங்கு செய்யாத மண் பாத்திரங்களை மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்'' என்கிறார் பகவதீஸ்வரன். கன்யாகுமரியில் செயல்பட்டு வரும் "சென்டர் ஃபார் சோசியல் டெவலப்மென்ட்'டின் இயக்குநர் அவர்.
அவரிடம் பேசினோம்:
""கிராமப்புறங்களில் முதலில் எல்லாம் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் மிகவும் நன்றாக நடந்து கொண்டிருந்தது. மண் எண்ணெய் அடுப்பு, கேஸ் அடுப்பு எல்லாம் வந்த பின்பு, அலுமினியம், எவர் சில்வர் பாத்திரங்கள் அதிக அளவில் சமையலறையில் புகுந்துவிட்டன. மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள் காணாமற் போய்விட்டன. இதனால் கிராமப்புறங்களில் இந்தத் தொழிலைச் செய்த பல ஆயிரக்கணக்கான மக்கள் படிப்படியாக வேலை இழந்தார்கள். பிழைக்க வழியின்றி வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள். ஒரு சிலரே இன்னும் கிராமப்புறங்களில் மண் பாண்டத் தொழிலைச் செய்து வருகிறார்கள்.
இந்தத் தொழில் பழையபடி நன்றாக நடக்க வேண்டும் என்றால், மண்பாண்டத் தொழிலில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தும்போது, நீண்டகாலமாகச் செய்து கொண்டிருந்த மண்பாண்டங்களை விட தரமான மண் பாண்டங்களை உருவாக்க முடியும்.
இதற்காக கைகளால் இயக்கப்பட்ட மண்பாண்டம் தயாரிக்கப்படும் சக்கரத்தை இயந்திரம் மூலம் சுழலச் செய்தோம். உலோக அச்சுகள் மூலம் மண்பாண்டங்களை உருவாக்கிப் பார்த்தோம். காஸ்டிங் முறையில் பலதரப்பட்ட மண் பாத்திரங்களைத் தயாரித்தோம். இப்படிப் பலவிதங்களில் முயற்சித்தாலும், மண் பாண்டங்கள் அதிக அளவில் விற்பனையாகவில்லை. அதற்கான தேவை அதிகரிக்கவில்லை.
மண் பாண்டங்களுக்கான தேவை பெருக வேண்டும். அதற்கு என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
மண் எண்ணெய் அடுப்பு, கேஸ் அடுப்பு ஆகியவை வந்த பின்பு, தற்போது அதிரடியாகச் சமையலறைகளில் புகுந்து கொண்டிருப்பது மைக்ரோ வேவ் அடுப்பு. வருங்காலத்தில் இந்த அடுப்பை இன்னும் அதிகப் பேர் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அடுப்பில் சமைப்பதற்குப் பயன்படும் வகையில் மண்பாண்டங்களை உருவாக்கினால் என்ன? என்று தோன்றியது.
ஆனால், எப்போதும் தயாரிக்கப்படும் மண்பாண்டங்களை இந்த மைக்ரோ வேவ் அடுப்பில் வைத்தால் ஒன்று மண்பாண்டம் அப்படியே வளைந்துவிடும். அல்லது உடைந்துவிடும்.
காரணம், சாதாரண விறகு அடுப்பில், கேஸ் அடுப்பில் சமைக்கும்போது 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் ஏற்படும். அவற்றில் மண்பாண்டங்களை வைத்துச் சமைத்தால் ஒன்றும் ஆகாது. ஆனால் மைக்ரோ வேவ் ஓவனில் சமைக்கும்போது வெப்பம் 900 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் போய்விடும்.
அப்படியானால் மண்பாண்டங்களை மைக்ரோ வேவ் அடுப்புக்குப் பொருத்தமாகத் தயாரிக்க வேண்டும். இதற்கு என்ன செய்வது? கொல்கத்தாவில் உள்ள இங்ய்ற்ழ்ஹப் எப்ஹள்ள் & இங்ழ்ஹம்ண்ஸ்ரீ தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் - ஐ அணுகினோம். அவர்கள் மண்பாண்டங்கள் செய்யப் பயன்படும் களிமண்ணோடு கால்சைட், சைனா கிளே, குவார்ட்ஸ் போன்ற பல வேறு சில இயற்கையான மண்பொருட்களை உரிய விகிதத்தில் கலந்து மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்துவதற்கேற்ப உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய சோதனைச்சாலையில் இந்த மண்பாண்டங்களைப் பலமுறை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்தக் கூடிய இந்த மண்பாண்டங்களை இனிமேல்தான் பெரிய அளவில் தயார் செய்ய வேண்டும்.
அப்படித் தயார் செய்தால், மீண்டும் பழையபடி மண்பாண்டத் தொழில் செழிக்கும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
"ஏற்கெனவே மைக்ரோ வேவ் அடுப்பில் பயன்படுத்த அலுமினியம், எவர்சில்வர் போன்ற உலோகப் பாத்திரங்கள் இருக்கும்போது, எதற்கு வேலை கெட்ட வேலையாக இந்த மண்பாண்டங்களை உருவாக்க வேண்டும்? கை தவறி கீழே போட்டால் உடைந்து போகும் மண்பாண்டங்களைத் தயாரிக்க எதற்கு வீண் முயற்சி?' என்றெல்லாம் பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த உலோகப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் நமது உடல் நலனுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் இந்த உலோகப் பாத்திரங்களில் ரசாயன மாற்றங்கள் அடைகின்றன. உதாரணமாக நாம் சமைக்கும்போது எலுமிச்சம் பழம், புளி போன்ற அமிலப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். உப்பு போன்ற காரப் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். எலுமிச்சை, புளி போன்றவை சமைக்கும் பாத்திரத்தில் ரசாயன மாற்றம் அடைந்து, உலோக ஆக்சைடுகளை ஏற்படுத்தி அது உணவில் கலந்து பல நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. உப்பு உலோகங்களை அரித்துவிடும் என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி அரிக்கப்படும் உலோகம் உணவில் கலந்து உடலுக்குத் தீங்கு செய்யும்.
சமைக்கும்போது உலோகப் பாத்திரங்களில் ஏற்படும் இந்த மாறுதல்கள் சட்டென்று கண்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதனால் கேடு எதுவுமில்லை என்று சொல்ல முடியுமா? மண்பாண்டங்களில் சமையல் செய்தால் இம்மாதிரியான உடல் நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. மண்பாண்டச் சமையலில் உணவுப் பொருட்களின் சுவையோ மிக நன்றாக இருக்கும்.
கீழே போட்டால் மண்பாண்டங்கள் உடைந்துவிடும் என்பதற்காக அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? கண்ணாடி, பீங்கான் டம்ளர்களில் தேநீர் அருந்துகிறோம். உடைந்துவிடும் என்பதற்காக அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா?
எனவே மைக்ரோ வேவ் அடுப்புகளில் மண்பாண்டங்களைப் பயன்படுத்துவது, ஒன்று கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகமாக்கப் பயன்படுகிறது. இன்னொருபுறத்திலோ, உடல் நலனுக்கு உகந்ததாகவும் இருக்கிறது.
இந்த புதிய தொழில்நுட்ப மண்பாண்டங்களை பெரிய அளவில் தயாரித்துச் சந்தைப்படுத்த அரசு உதவினால் நிறைய கிராமப்புற மண்பாண்டத் தொழிலாளர்கள் - கைவினைஞர்கள் நன்மையடைவார்கள்''என்றார் பகவதீஸ்வரன்.
No comments:
Post a Comment