களிமண்ணால் பானைகள் செய்து மூன்று தலைமுறையாக குடும்பத்தை தலைநிமிர்த்திய எண்பது வயதைக் கடந்த மூதாட்டிகள், இப்போதும் தன்னம்பிக்கையுடன் தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள பெரும்செல்வவிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக மண்பாண்டம் செய்யும் தொழில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் சிறந்து விளங்கும் கிராமம் இது.
இங்கு சிறு வயது முதலே மண்பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்த பலர் முதுமையிலும் துடிப்புடன் பானை வனைகின்றனர். அங்கு எண்பது வயதை கடந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் இன்றும் மண்கலன்களை வடிவமைத்து வருகின்றனர்.
வயதானாலும் அயராத உழைப்பு
“காலம் மாறிபோச்சு... லாரி லாரியா யாரெல்லோமோ மண்ணையும், கல்லையும் அள்ளிட்டு வெளியூர் கொண்டு போறாங்க. ஆனா இரண்டு பெட்டி களிமண்ணை அள்ளினா ஏழைகளான எங்களை மிரட்டுறாங்க” என ஆதங்கத்துடன் பேச்சைத் தொடங்கினார் தங்கம்மாள்.
“நான் 10 வயசுல காப்பிக்காட்டில் மண்பானை, கறிசட்டிகளைச் செய்ய ஆரம்பிச்சேன். காலையில் களிமண்ணை பிசைஞ்சு பக்குவமா மணல் கலந்து பானை செய்வோம். அப்புறம் அதையெல்லாம் சூளையில போடுவோம். மொத்தக் குடும்பமும் இந்த வேலைய செய்யும். ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்பட்டோம். இந்த மண்பானை தொழிலாலதான் எங்க குடும்பம் முன்னேறுச்சு” என்று சொல்லும் தங்கம்மாள் தன்னுடைய நான்கு பெண்களையும், இரண்டு ஆண் குழந்தைகளையும் வளர்த்து, ஆளாக்க இரவு பகலாக உழைத்திருக்கிறார். கணவன் இறந்த பிறகு தற்போது மகனின் அரவணைப்பில் வசிக்கிறார்.
“இருந்தாலும் பேரன், பேத்திகளை அவங்க ஆசைக்கேத்தபடி வாழவைக்க மண்பானை செய்யறேன்” என்கிறார்.
சுய சம்பாத்தியமே மகிழ்ச்சி
ராஜம்மாள் பாட்டியுடன் சேர்ந்து பல முதியவர்கள் குழுவாக வனைந்த பானைகளைத் தட்டி சீர்படுத்திக்கொண்டிருந்தனர். “என்னதான் மக்கள், பேரன் பேத்திகள் நல்ல நிலையில வச்சிருந்தாலும், தினமும் அஞ்சு பானையாவது செஞ்சு, அதுல வர்ற வருமானத்தைக் குடும்பத்துக்காக செலவு செய்யறதுலதான் சந்தோஷம்” என்கின்றனர்.
அரசாங்கம் உதவுமா?
அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால் பானை செய்ய மண் எடுக்கச் சிரமமாக இருக்கிறது என்கின்றனர் அந்த மூதாட்டிகள்.
“இந்தத் தொழில் செய்ய எங்க பேரன், பேத்திங்க விரும்பவதில்லை. எங்க கடைசி காலம் மட்டும் இந்தத் தொழிலை நாங்க விடமாட்டோம். கேரளாவுல எங்க உழைப்புக்கு நல்ல மரியாதை தர்றாங்க. நம்ம ஊருலேயும் மண்பானை தொழிலை மதிச்சி அரசாங்கம் ஏதாவது செய்யணும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment