குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, November 21, 2015

தேவ வாத்தியத்தின் கர்த்தாவுக்கு தேசிய விருது!

இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் அக்கருவிகளை தயாரிப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால்தான் பாரம்பரியமாக இசைக்கருவிகள் உற்பத்தி செய்து வந்த பலர் அத்தொழிலை விட்டு விலகி விட்டார்கள். பல அரிய இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

 சங்கீத நாடக அகாடமி இந்த ஆண்டு முதல், இசைக்கலைஞர்களுக்கு அளிக்கும் மரியாதையை இசைக்கருவிகளை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கும் வழங்கும் நடைமுறையைத் தொடங்கியிருக்கிறது. முதன்முறையாக அந்தப் பெருமை மானாமதுரையைச் சேர்ந்த கடம் தயாரிக்கும் கலைஞர் மீனாட்சிக்குக் கிடைத்திருக்கிறது!

கடம் - கர்நாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று. இது மிக எளிமையான இசைக்கருவி. இசைக்கருவிகளில் மண்ணால் ஆன கருவிகளே முதலில் தோன்றியதாக வரலாற்றாய்வாளர்கள் சொல்கிறார்கள். பானைத்தாளம், வில்லடி பானை, கதைப்பானை, கடம் என ஆதியில் தாளம் அனைத்தும் மண்ணிலிருந்தே தொடங்கின. சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘குடமுழவு’ எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி ‘கடம்’ ஆனதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதியில் பக்க வாத்தியமாக இருந்த கடம், விக்கு வினாயக் ராம் போன்ற புகழ்பெற்ற வித்வான்களின் முயற்சியால், தனித்து இசைக்கும் பக்கா வாத்தியமாக உருவெடுத்துள்ளது. 

கடத்தின் இசைநயம் அதன் தயாரிப்பில் தான் அடங்கியிருக்கிறது. பானைக்கும் கடத்துக்குமான வேறுபாடு நூலிழைதான். ஆனால், பானையை உருவாக்குவதற்கான உழைப்பைப்போல பன்
மடங்கு கடத்துக்குத் தேவைப்படும். கடம் தயாரிப்பால் உலகப்புகழ் பெற்றிருக்கிறது மானாமதுரை. மானாமதுரை குலாளர் தெருவில் மீனாட்சி குடும்பம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக கடம் தயாரிப்புத் தொழிலைச் செய்து வருகிறது. மீனாட்சியின் கணவர் யு.வி.கேசவன் கடம் தயாரிப்பில் பெயர் போனவர். இவரின் கைபட்டு உருவாகும் கடம் சுத்த நாதம் பேசும் என்று கலைஞர்கள் கொண்டாடுகிறார்கள். கேசவனுக்குப் பிறகு மீனாட்சியும், மகன் ரமேஷும் கடம் தயாரிக்கிறார்கள். ரமேஷும் தொழிலில் சிறந்தவர்... கடச்சிற்பி, சிறந்த மண்பாண்டக் கலைஞர் விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

“எங்களுக்கு குலத்தொழிலே மண்பாண்டம் தயாரிப்புதான். எங்க ஊர்ல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பூந்தொட்டிகள், காய்கறிகளைப் பாதுகாக்கும் சீதளப் பாத்திரம், அகல்விளக்கு, அணையா விளக்கு, யானைமுகத் தொட்டி, அக்னிச் சட்டி, உமி அடுப்பு, கரி அடுப்பு, மதன் சூளா அடுப்பு தயாரிக்கிறாங்க. எங்கக் குடும்பம் மட்டும் தான் நாலு தலைமுறையா கடம் தயாரிப்பை விடாம செஞ்சுக்கிட்டு வருது. என் கணவரோட தாத்தா உலக வேளார்தான் முதன்முதல்ல கடம் செய்ற மரபை ஆரம்பிச்சார். உலகத்துல உள்ள எல்லா கடக் கலைஞர்களுக்கும் அவரோடப் பேரு தெரியும். அவருக்குப் பிறகு அவர் மகன் வெள்ளைச்சாமி வேளார். அவருக்குப் பிறகு எங்க வீட்டுக்காரர். இப்போ என்கூட என் மகன் ரமேஷும் கடம் செய்றான். 

கடம் செய்ய மண்பாண்டத் தொழில் மட்டும் தெரிஞ்சா பத்தாது... இசைஞானமும் வேணும். கடத்தைச் செய்யும்போதே அது சுத்தமா நாதம் பேசுமா, ஸ்ருதி நிக்குமான்னு எல்லாம் பாக்க வேண்டியிருக்கும். இல்லைன்னா சுட்டு எடுக்கும்போது கடை சலா போயிடும். இந்தத் தொழில்ல பேர் எடுக்க முடியாது. உலக வேளாருக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. பஜனை மடத்துக்குப் பாடப் போவார்... நாடகங்கள் எழுதிப் மேடையில போடுவார்... நிறைய இசைக்கலைஞர்களோட தொடர்பு இருந்ததால முறையான இசை அறிவு உண்டு. ஒரு நண்பர் வேண்டிக் கேட்டுக்கிட்டதுக்காக ஒரு கடம் செஞ்சு கொடுக்க, அந்த கைப்பக்குவத்துல அந்த நண்பர் மயங்கிப் போனாராம். அதுக்குப் பிறகு உலக வேளார் பேரு பரவிடுச்சு. நிறைய கலைஞர்கள் தேடி வரத் தொடங்கிட்டாங்க. அப்படித்தான் இந்த தொழில் வளர்ந்திருக்கு.   

வெள்ளைச்சாமி வேளார் ஆர்மோனியக் கலைஞர். என் வீட்டுக்காரர் கேசவனும் ஆர்மோனியம் வாசிப்பார். குன்னக்குடி வைத்தியநாதன்கிட்ட கத்துக்கிட்டவர். என் பையன் ரமேஷும் கீபோர்டு வாசிப்பான். எனக்கு பதிமூணு வயசுல திருமணம் முடிஞ்சிடுச்சு. எங்க வீட்டுலயும் மண்பாண்டத் தொழில் தான். ஆனா, அடுப்பு, பானை, சட்டிதான் செய்வோம். கடத்தை பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. திருமணமாகி வந்தபிறகு கத்துக்கிட்டேன். மண்பாண்டத் தொழிலுங்கிறது குடும்பத் தொழில். எல்லாரும் சேந்து கஷ்டப்பட்டாதான் ஜீவனம் பண்ண முடியும். சில வேலைகளை ஆண்கள் 
மட்டும்தான் செய்ய முடியும். சில வேலைகளை பெண்களும் செய்யலாம். ரொம்ப கடினமான தொழிலும் கூட. கடம் செய்யிற கைப்பக்குவம் அவ்வளவு லேசுல வந்திடாது. என் மாமனார் வெள்ளைச்சாமி வேளார்கிட்டயும், என் வீட்டுக்காரருக்கிட்டயும்தான் இந்த தொழில்நுட்பத்தை கத்துக்கிட்டேன்Ó என்கிறார் மீனாட்சி. 

காவிரியின் மடியில் கிடைக்கும் வண்டல் எந்த அளவுக்கு சிறப்பு மிகுந்ததோ அதற்கு இணையானது வைகையாற்று வண்டல். மானாமதுரை கடத்தின் மேன்மைக்கு வைகையாற்று வண்டலே பிரதான காரணம். மானாமதுரையில் தயாராகும் அனைத்துப் மண்பாண்டங்களுமே தனித்தன்மை மிகுந்ததாக இருக்கின்றன. இவ்வூர் மண்பாண்டத் தொழிலுக்கு 300 ஆண்டு பாரம்பரியம் உண்டு. இங்கிருந்து மண்பாண்டங்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகின்றன. சித்த மருத்துவப் பயன்பாட்டுக்கான ‘பாளைக்குடுவை’ என்ற பாத்திரத்தை  வடிவமைத்து ஆய்வுக்கூடங்களுக்கும் அனுப்புகின்றனர். மருத்துவப் பொருட்களைச் சூடாக்கி அதில் வெளியேறும் ஆவியைக் குளிர்வித்துச் சித்த மருந்துகள் தயாரிப்பது வழக்கம். உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கும்போது பாத்திரத்தில் உள்ள உலோகத் தன்மை மருந்தின் குணத்தை முறித்து விடும். அதனால் மண்ணால் செய்யப்படும் குடுவைகளைத்தான் ஆய்வகங்களில் பயன்படுத்துகின்றனர். 

பிற மண்பாண்டங்களுக்கும் கடத்துக்கும் மண் கலவைகளிலேயே வேறுபாடு உண்டு. பார்க்க பானை போலிருந்தாலும் கடம் வேறு... பானை வேறு! பானையை 4 மணி நேரம் நெருப்பில் வேகவைத்தால் போதும். கடத்தை 16 மணி நேரம் வேக வைக்க வேண்டும். ஒரு கடம் 10 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். அந்த அளவுக்கு கனமாக உருவாக்கினால்தான் நாதம் நிற்கும். பானை தட்டினாலே உடைந்து விடும். கடம் அரிவாள் வைத்துக் கொத்தினாலும் தெறிக்காது. 

கடத்துக்கு மூன்றுவிதமான மண் தேவை. வைகையாற்று வண்டல்.... அடுத்து கண்மாயில் பதிந்து கிடக்கும் நைஸான களிமண் (மானாமதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து எடுக்கிறார்கள்)... மூன்றாவது, மணல். 1 மாட்டு வண்டி வண்டலில் 40 கடம் செய்யலாம். “முன்னெல்லாம் களிமண் முதலீடு இல்லாமக் கிடைக்கும். தேவைப்படும் போது கண்மாய், ஏரிகள்ல மண் எடுத்துக்குவோம். எங்க மூலமா அந்த நீர்நிலைகளும் சுத்தமாகிடும். இப்போ நிறைய கட்டுப்பாடுகள் வந்திடுச்சு. மண்ணுக்கே நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கு. அதனால பலபேர் இந்தத் தொழிலை விட்டுட்டுப் போயிட்டாங்க. 

முன்னெல்லாம் மண்ணெடுத்து டிராக்டர்ல கொண்டு வருவோம். ஒரு டிராக்டர் எடுத்தா ரெண்டாயிரம் செலவாகும். இப்போ டிராக்டர்ல எடுக்கக்கூடாதுன்னு தடை போட்டாங்க. மாட்டு வண்டியிலதான் கொண்டு வரணும். ஒரு டிராக்டர் மண்ணு 7 மாட்டு வண்டிக்குச் சமம். ஒரு வண்டியில 20 தட்டு மண்ணு தான் பிடிக்கும். அதுக்கே 700 ரூபாய் செலவாகுது. கரம்பையை சுத்தம் பண்ணி மணல் சேத்து மிதிச்சு பதப்படுத்தி எடுக்கிறதுக்குள்ள 1,100 ரூபாய்க்கு மேல ஆயிடும். 

எங்கள மாதிரி பாரம்பரியமா மண் எடுக்கிறவங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிச்சுட்டு ஓட்டுக்கம்பெனி, சேம்பர்காரங்களுக்கு பர்மிட் கொடுக்கிறாங்க. அவங்க ஜேசிபி வச்சு நாங்க ஒரு வருஷம் அள்ளுற மண்ணை 20 நாள்ல அள்ளிட்டுப் போயிடுறாங்க. அதனால எங்க தொழில் பெரிய சிக்கல்ல இருக்கு. மண் இருந்தாதான் எங்களுக்குத் தொழில். மண்ணு இப்போ தங்கம் மாதிரி ஆகிப்போச்சு. தேவைக்குத் தகுந்த மாதிரி இருப்பு வச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா பயன்படுத்துறோம். 

தினமும் கடம் செய்ய முடியாது. எப்பவாவதுதான் வித்வான்கள் வருவாங்க. அதனால முடிய முடிய செஞ்சு வச்சுக்குவோம். எவ்வளவு கடம் தேவையோ அதுக்குத் தகுந்த மாதிரி வண்டலும் கரம்பையும் எடுத்து சேத்து நல்லாக் காயவைப்போம். காஞ்சதும், பாத்தி கட்டி ஊறப்போடுவோம். நல்லா ஊறுனதும் நாலு தட்டு மணல் போட்டு, கிராபைட் பவுடர், ஈய செந்தூரம் சேத்து நல்லா காலால மிதிக்கணும். இதுதான் பொருளோட தரத்தைத் தீர்மானிக்கிறது. இதை பெண்கள் செய்ய முடியாது. மூணு மணி நேரம் மிதிச்சு நல்லா உழட்டணும்... ரத்தம் வத்திப்போகும். அப்படி மிதிச்சாதான் மண் இழுக்கிற இழுவைக்கு ரப்பர் மாதிரி வரும். அதை அப்படியே எடுத்து சேமிச்சு வச்சிருவோம். 

மறுநாள் கொஞ்சம் கொஞ்சமா மண்ணை எடுத்து, ஃபைபர் வீல் சக்கரத்துல வச்சு சுத்தி பானை வடிவத்துக் கொண்டு வருவோம். ஒருநாள் முழுதும் உக்காந்து சுத்துனா 20 கடம் தயாராகும். அதை அப்படியே நிழல்ல வச்சிடுவோம். இதுவரைக்கும் மண்ணு ஊமையாத்தான் இருக்கும். நல்லா தூர் தட்டி பதமாக்கணும். அப்பதான் மண்ணுக்குப் பேச்சு வரும். கடத்தோட நாதம் குலையாம தன்மையா உருவாக்குறதுக்கு பதம் பாத்து தட்டணும். 

நல்லா தொழில்ல கைவந்தவங்கதான் இந்த வேலையைச் செய்ய முடியும். வடிவமாக் கொண்டு வந்து  நாதம் பாத்து, ஸ்ருதி கணிச்சு தட்டுவோம். தட்டத்தட்ட நல்லா இறுக்கத் தன்மை குடுத்திடும். கடத்துல 3 பகுதி உண்டு. வாய், புடை, கீழ்... இது மூணும் சேதாரம் இல்லாம, கோணல் இல்லாம வந்தாதான் தரமான கடம் வரும். ஒண்ணு கோணினாலும் நாதம் பிசகிடும். கடத்தோட 
திக்னஸ், நீளம், அகலமும் ரொம்ப முக்கியம். பழகிட்டதால இயல்பா எங்களுக்கு இது அமைஞ்சிடும்.

முழுமையடைஞ்ச கடத்தை அப்படியே 15 நாட்கள் நிழல்ல காய வச்சிடுவோம். 15 நாளுக்குப் பிறகு, 1 நாள் நல்லா வெயில்ல காய வைப்போம். தொட்டா சூடாகுற பதத்துல எடுத்து சிவப்பு கலர் பாலீஷ் பூசி சூளையில ஏத்திடுவோம். வேலிக்கருவை முள்ளுதான் நின்னு எரியும். ஒன்னரை ஆள் உயரம், 1 சாண் கனத்துக்கு விறகை அடுக்கி உள்ளுக்குள்ள கடத்தை வச்சு வேக வைப்போம். நல்லா வெந்து எடுத்துட்டா கடம் ரெடி... - வியர்வையைத் துடைக்க நேரமில்லாமல் தூர் தட்டியபடி பேசுகிறார் மீனாட்சி. எல்லாப் பக்கமும் ஒரே நாதம் கேட்க வேண்டும். அதுதான் நல்ல கடம். சிறிது மாறினாலும் அது குடம். தண்ணீர் எடுக்கத்தான் பயன்படுத்தலாம். இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், Ôடிரம்ஸ்Õ சிவமணி, வித்வான் கதிர்வேல், பெண் வித்வான்சுகன்யா ராம்கோபால், இ.எம்.சுப்பிர மணியன், உமாசங்கர், கார்த்திக், சுரேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் மானாமதுரையின் வாடிக்கை
யாளர்கள்!

மானாமதுரை கடத்தை விரும்பி வாசிக்கும் இசைக்கலைஞர்களில் உலகப் புகழ்பெற்ற கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் முக்கியமானவர். ‘மன்னவன் வந்தானடி தோழி’ தொடங்கி ‘குறுக்கு சிறுத்தவளே வரை ஏராளமான பாடல்களுக்கு மானாமதுரை கடத்தையே பயன்படுத்தியவர் விக்கு விநாயக்ராம். ஆண்டுக்கு 4 முறையேனும் கடம் வாங்குவதற்கு மானாமதுரைக்கு வருகிறார். உலகம் முழுதும் இருந்து ஏராளமான கலைஞர்களும் இசையார்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் கடம் வாங்குவதற்காக மானாமதுரை வருகிறார்கள். இவர்கள் கூடவே தங்கியிருந்து கடம் தயாரிக்கும் 

நுட்பத்தையும் பார்க்கிறார்கள். ஆர்டரின் பேரில் வெளிநாடுகளுக்கு அனுப்பியும் வைக்கிறார்கள். ஒரு கடம் 500 ரூபாய் வரை விலை போகிறது.
“கடம் தயாரிக்கிறதுல பெரிய லாபமெல்லாம் இல்லை. ஒரு கடம் செய்யிற நேரத்துல 40 பானை செஞ்சிடுவோம். ஆனா, இது எங்கக் குடும்பத்து பெரியவங்க தவம் மாதிரி செஞ்ச கலை. இது அழிஞ்சு போகக்கூடாது. கடம் இசையை பரப்புறதுல எங்க பங்கும் இருக்கணும். அதுக்காக பெரும்பாலும் யார்கிட்டயும் விலை பேசுறதில்லை. குடுக்கிறதை வாங்கிக்குவோம். இசைக்கல்லூரி மாணவர்கள், இசையில ஆர்வம் உள்ளவங்க வந்தா கொடுக்கிறத வாங்கிக்கிட்டு கடம் கொடுத்தனுப்புவோம். இலவசமா கொடுத்தா மதிப்பிருக்காது. இன்னைக்கு கடம் இசை பெரிய அளவுல வளர்ந்திருக்கு. 

கடத்தை மூலவாத்தியமாவே வச்சு வாசிக்கிறாங்க. பெங்களூர் சுகன்யா ராம்கோபால் கடத்துல 7 ஸ்ருதிகளை வச்சு பாட்டு பாடுறாங்க. ஜலதரங்கம் மாதிரி ‘கடதரங்கம்’னு ஒரு நிகழ்ச்சி நடத்துறாங்க. விக்கு வினாயக்ராம் சார் 4 கடம் வச்சு ‘நாதாலயம்’னு ஒரு கச்சேரி நடத்துறார். கடத்துக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைச்சிருக்கு. இதைத்தான் எங்களை மாதிரி தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறோம். சங்கீத் நாடக அகாடமி விருது கிடைச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி. என் கணவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். எங்களுக்காக பரிந்துரை செஞ்சவங்களுக்கும் தகவல் அறிஞ்சு பாராட்டுறவங்களுக்கும் ரொம்ப நன்றிÓ - கண் கலங்க சொல்கிறார் மீனாட்சி. 
 
ஒரு கஞ்சிரா உருவாக ஒரு உடும்பின் உயிர் தேவை. ஒரு தவில் உருவாக ஒரு மாட்டின் உயிர் தேவை. கடமோ மண்ணில் இருந்து உருக்
கொள்கிறது. நிலத்தில் இருந்து மண்ணெடுத்து, மழையில் இருந்து நீரெடுத்து, காற்றில் உலர வைத்து, அக்னியில் சுட்டு உருவாக்கப்படும் கடத்தில் வெற்றிடமாக ஆகாயம் இருக்கிறது. ஐம்பூதங்களும் இதற்குள் அடக்கம். அதற்காகவே இதை ‘தேவ வாத்தியம்’ என்கிறார்கள். மடி மீது தாங்கி குழந்தையை தாலாட்டுவதைப் போல இதை இசைக் கிறார்கள். பெருமை பெற்ற அக்கருவியின் கர்த்தாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இசைஉலகம் பெருமை பட்டுக்கொள்ளலாம்!

எங்க வீட்டுலயும் 
மண்பாண்டத் 
தொழில்தான். 
அடுப்பு,  பானை, 
சட்டிதான் செய்வோம். 
எனக்கு பதிமூணு வயசுல 
திருமணம் முடிஞ்சிடுச்சு. 
அதற்குப் பிறகுதான் 
கடம் செய்ய 
கத்துக்கிட்டேன்...

‘‘மண்ணு இப்போ 
தங்கம் மாதிரி 
ஆகிப்போச்சு. தேவைக்குத் 
தகுந்த மாதிரி 
இருப்பு வச்சுக்கிட்டு 
கொஞ்சம் கொஞ்சமா 
பயன்படுத்துறோம்...’’

No comments: