குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Monday, March 18, 2013

பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார்

              வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே 

                      உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. 

     சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர்.

      அவர்களில் சிறந்தவர்களுக்கு “குயம்” என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும்

     இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசமிப்பிள்ளை அவர்கள் 

    தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர்  குலாலர்குலத்தைச் சார்ந்த பெண் என்பது 

                                                 இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.

காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன.
சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது.
கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார்.
அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார்.
இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது.
வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர்.
யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு
 பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது.
எங்கும் ஆரவாரம் இருந்தது.
கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் 
சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன.
இருவரும் போர் செய்யத் தொடங்கினர்.
வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.
சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை
 ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் 
உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது.
"ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்" என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது.
"நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் 
போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான்.
வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்" 
என்று கட்டளை இட்டார் சோழ அரசர்.
வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் 
அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர்.
அரசரைச் சோதித்த மருத்துவர் "அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து 
உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது.
வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன்.
உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் 
பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் 
கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்."
மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து 
கருவூரை அடைந்தது.
சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன.
வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள்.
எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன.
வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் 
அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர்.
வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான்.
"வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்"
 என்றான்.
"ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் 
நம் நாடே பெருமை பெற்றது" என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர்.
புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார்.
அவரை வரவேற்ற அரசர் "வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்" 
என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.
அவையினர் எல்லோரும் எழுந்து "புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க" 
என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.
உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் "புலவரே! இதில் அமருங்கள்" என்று வேண்டினார்.
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார்.
அரசரும் அரியணையில் அமர்ந்தார்.
புலவர் எழுந்து நின்று "நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! 
பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை 
உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்?
 உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத்
 திட்டம்" என்றார்.
"தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும்
 பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. 
நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்" என்றார் அரசர்.
"வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப்
 பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில
 நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்" என்றார் அவர்.
"சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு 
இருப்பீர்கள்.
அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை.
அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் 
புகழாத புலவர்களே இல்லை.
அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி
 என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார் அரசர்.
"அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?"
"புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் 
தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். 
என் எண்ணம் நிறைவேறியது.
தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு 
என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை."
"அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன்.
 அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?"
"புலவரே" என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின்
 மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். 
அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே."
"அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. 
அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் 
அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?"
"மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற 
பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம்.
 உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?"
"அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள்,
சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள்.
 நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது."
"புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான்.
 என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை 
இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?"
"அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் 
துளைத்து வெளியே வந்தது."
"என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே."
"அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு
 எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள்.
ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார்.
மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்."
"இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே"
"அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் 
செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். 
முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் 
பழி தரும் செயல் அல்லவா?"
"ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் 
வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள்.
இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை 
எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது."
"அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் 
என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். 
என்ன செய்வது என்று கலங்கினார்.
அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்."
"என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும்
 சான்றோர்களும் தடுக்க வில்லையா?"
அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள்.
ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன்
 பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான்.
அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன்
 என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. 
நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார்.
"பிறகு என்ன நடந்தது புலவரே?"
"வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் 
தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்."
"ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர்
 செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? 
அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்".
"அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார்.
 உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்."
"புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது.
 வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார்.
 வாழ்க அவர் புகழ்" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான்.
1. "நனியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப் 
புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே"
(புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)
                      
                                                   குலாலர் தளம்