குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Wednesday, April 3, 2013

உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம்


உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம்.
இது வரலாற்று உண்மை.அதைச் செய்தவர்கள் குலாலர்கள்

கோவில் உள்ள ஊர்களில் எல்லாம் பரந்து வாழும் குலாலர்கள்

மண்பானை, சட்டி, மண் தட்டு, மண் அடுப்பு, உண்டியல், கார்த்திகை விளக்கு, மாட்டுத்தொட்டி, மண் குதிர் என்று செய்து வருகின்றனர்

மனித குலத்தின் நாகரிகப் படிக்கட்டில் வெகு ஆரம்பத்திலேயே சக்கரத்தின் கண்டுபிடிப்போடும், நெருப்பின் உதவியோடும், அறிவின் துணையோடும், உழைப்பின் உன்னதத்தோடும், இயற்கையின் அரவணைப்போடும் உருவான புராதனமாக இந்தச் மண்பாண்ட தொழில் மனித குலத்திற்கான நடைமுறை வாழ்வியல், உளவியல் வாழ்வியலின் தேவைகளை எப்போதும் நிறைவு செய்தே வந்துள்ளது.
கரம்பை மண் கண்மாயிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்து வீட்டு முற்றத்தில் குவித்து, அவற்றைப் பரப்பி வட்டமாகக் குழி பறித்து, நடுவில் குடம் குடமாய்த் தண்ணீர் விட்டு, சுற்றிலும் ஆற்று மணல் அணைத்து வைத்து ஊற வைப்பார்கள். கரம்பை நன்றாய்த் தண்ணீர் குடித்து ஊறியதும், அவற்றில் வரித்துக் கட்டிய கோவணத்தோடு இறங்கி, தொடைகள் அதிர, ஆற்று மணல் சேர்த்து மிதிப்பார்கள். மிதிப்பது அநேகமாய் ஒரு ஆள் அல்லது இரண்டு ஆள் இருக்கும். அளவைப் பொறுத்து மாறுபடும்.
ஆற்று மணலும், ஊறிய கரம்பையும் ஒரு விதமான பக்குவ நிலையில் ஒன்று கலக்கும் வரை கால்கலால் பூப்போல வட்டம் தோன்றுமாறு மிதிப்பார்கள். சக்கரத்தின் அலங்காரமான ஆரக்கால்கள் போன்ற ஒரு விதத் தோற்றம் கிடைக்கும். பின் அது அகன்று விடும். அதன் மீது வலது கைச் சுட்டு விரல் மட்டும் நீளுமாறு வைத்து நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் கோடு கிழித்து, அப்படியே ஆட்டுத்தோல் சுருட்டுவது போலச் சுருட்டிச் சுருட்டி எடுப்பார்கள். எடுத்தவற்றை ஆற்று மணல் சேர்த்து மீண்டும் மிதிப்பார்கள். பானை செய்யத் தேவையான அளவு பக்குவம் வந்தவுடன் அவற்றை அப்படியே எடுத்துச் சிறு குன்று போல் குவித்து வைப்பார்கள். அதன் மீது சாக்குப் போட்டு தண்ணீர் தெளித்து மூடி வைப்பார்கள். மழைக் காகிதம் வந்த போது, அதனாலும் மூடி வைப்பார்கள்.
எல்லாம் உள்ளிருக்கும் மண்ணின் பிறகு சிறிது ஓய்வு மற்றும் உணவுக்குப் பின், திரிகையைத் தூக்கி, அதன் அடிப்புறக் கம்பிக்கு எண்ணெய் இடுவார்கள். திரிகைக் குழியில் வாழைப் பட்டையைக் குச்சியில் மடித்து அதன் உட்புறச் சுற்றுச் சுவர்களில் வைத்திருப்பார்கள். அதிலும் எண்ணெய் இடுவார்கள். பின்னர் திரிகைக் குழியில் திரிகைக் கம்பியைப் பொருத்திச் சுழலவிட்டுப் பார்ப்பார்கள். சில திரிகைகளில், கம்பிகளுக்குப் பதில், ஆரஞ்சுப் பழச் சாறு பிழியும் கருவியில் இருப்பது போலக் குமிழ் மற்றும் அது பொருந்தும் வகையிலான குழி இருக்கும். அதிலும் எண்ணெய் இடுவார்கள். இப்போது, இயந்திரத் திரிகை வந்து விட்டது. இந்த வகைத் திரிகைகளில் மேலே வட்டப் பலகை இருக்கும். அதனை எதிரே ஒருவர் அமர்ந்து சுற்ற வேண்டும். இன்னும் சில பகுதிகளில், வண்டிச் சக்கர வடிவில் நடுவில் சிறு இடம் விட்டு இருக்கும். இதனைப் பானை வனைபவரே கம்பினால் சுற்றிக் கொள்ளலாம்.
அப்புறம் திரிகையில் நடுவில் குழைத்த பதப்படுத்திய மண் தேவையான அளவு எடுத்து, நடுவில் வைத்து, திரிகை சுழல ஆரம்பிக்கும். வனைபவரின் கை அதை அணைத்து மேலெழுப்பி, சுற்றுச்சுழற்சியின் விஞ்ஞான அனுபவத்தில், உச்சி நடுவில் லாவகமாகக் கை நுழைத்துக் குழி உண்டாக்கிப் பானை வடிவில் மண் வனையப்படும். பானையில் உச்சிவாய் வடிவம் உருவான பின்பு, கழுத்துப்பகுதி ஆரங்கள், சுழற்சியின் வேகத்திலேயே லாவகத்தோடு, கீற்றுக் குச்சியின் துணையோடும், விரல்களின் துணையோடும் இடப்படும், பானையின் வடிவம் தேவையான அளவுக்கு வந்தவுடன், இடது கையில் அல்லது வலது கை மணிக்கட்டில் கட்டியிருக்கும் நூலால் அடிப்பகுதியை லாவகமாக அறுத்தெடுப்பார் வனைபவர்.
பின்னர் அவை சற்று உலர்ந்தவுடன், அவற்றை எடுத்து, கரண்டி வடிவிலிருக்கும் தட்டுக் கட்டை, பவுடர் பூசும் பிளாஸ்டிக் பிடி போட்ட வட்ட வடிவப் பஞ்சு வடிவிலிருக்கும், தட்டுக் கல் உதவியுடன், வனைந்த அடியற்ற பானைகளைத் தேவையான அளவு தட்டி உருண்டை வடிவம் கொண்டு வருவதற்காக, இடது கையில் தட்டுக் கல்லை உட்புறம் வைத்துக் கொண்டு, வெளிப்புறம் வலது கையால் தட்டுக் கட்டையில் வட்டப் பகுதியினால் லாவகமாகத் தட்டுவார்கள். பல இடங்களில் பெண்களும், சில இடங்களில் ஆண்களும் இந்த வேலைகளைச் செய்வார்கள். கால்களை நீட்டி உட்கார்ந்த நிலையில் தொடை வரை வழித்த புடவை அல்லது வேட்டிகள். தொடையில் வைத்து, ஒரு பிள்ளையைக் குளிப்பாட்டுவது போன்ற நிலையில் வைத்துத் தட்டுவார்கள். அந்தக் காலத்தில் பானை தட்டத் தெரிந்த பெண் என்றால் அவளுக்குக் கல்யாண மவுசு அதிகம். ஒரு உழைப்பு சக்தியல்லவா?
பின்னர்த் தட்டிய பானைகளைக் கூடாரத்திற்குள்ளோ அறைக்குள்ளோ வரிசையாகத் தரையில் அடுக்கி உலர வைப்பார்கள். வெயிலில் காய வைத்தால், மண மண் என்பதால் வெடித்துவிடும். மண மண் என்றால் மணல் மண். அதாவது ஆற்று மணல் சேர்த்த மண். இதையே அடுப்பு போன்ற, திரிகை தேவைப்படாத கை கைவேலைகளில் உருவாகும் பொருட்கள் செய்வதற்கான மண் என்றால் அதனைச் சண்டு மண் என்பார்கள். சண்டு என்றால், அறுவடைக் காலத்தில் கிடைக்கும் வைக்கோல்களின் உதிரிகள் அல்லது உதிரிகளாகத் தரிக்கப்பட்ட வைக்கோல்கள். மணலோடு அத்தகைய சண்டும் சேர்த்த மண் என்றால், வெயிலில் உலர வைப்பார்கள். வெயிலில் அது வெடிக்காது. வைக்கோல் நார்கள் மண் வெடித்து விடாத படி காக்கும்.
இனக்காய்ச்சலில் (நிழல் காய்ச்சலில்) உலர்ந்த பானைகளைப் பின்னர் சற்று வெயிலிலும் வைத்துக் காய வைப்பார்கள். பின்னர் பானைகள், சூளை வைப்பதற்குத் தயாராகிவிடும். அதையடுத்துச் சூளை வைப்பார்கள்.
பானைகளைச் சுள்ளாக்கரை எனப்படும் சூளைக் கரையில் அதாவது சூளை வைக்கும் இடத்தில், வட்ட வடிவில் அரை வட்டக் கோள உயரத்தில் குவியலாக, இடையிடையே காய்ந்த தேங்காய் மட்டைகள், சிறிய சிறிய காய்ந்த தென்னை மட்டைகள் சேர்த்து அடுக்குவார்கள். பின்னர், அடுக்கி முடித்ததன் மேல், தேங்காய் மட்டை, தென்னை மட்டை, வைக்கோல்கள் முதலிய எரிபொருட்களால் மூடுவார்கள். மூடியபின் மாட்டுச் சாணத்தைக் கரைத்து, மேலாகத் தெளித்துப் பூசுவார்கள். பின்னர், மூன்று நான்கு முனைகளில் வைக்கோலுக்குள் துளையிட்டு, நெருப்பு மூட்டுவார்கள். அடர்த்தியான வெண்புகை எழும்பும். இரண்டு மணி நேரத்தில் வெந்து விடும். இடையிடையே கவைக் கம்பால் மேலாக இருக்கும் பானையில் வேக்காட்ப் பதம் பார்ப்பார்கள். இத்தகைய சூளைகள் பெரும்பாலும் உச்சி வெயில் தாண்டிய நடுவெயில் நேரத்திலேயே வைக்கப்படும்.அதீத நெருப்பென்றாலும், பானைகள் முறுகித் திருகி விடும். கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் அனுபவ நெருப்பில் எரியவிட வேண்டும்.
அப்புறம் அந்த நாளின் மசங்கிய மாலையிலோ, அல்லது மறுநாள் காலையிலோ, பானைகளைப் பிரித்தெடுப்பார்கள். பானைகள் செவ செவ என்று சிவந்து மலர்ந்திருக்கும். சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்சுகள் போலிருக்கும் பானைகள் ஒவ்வொன்றும் வாய் திறந்து சிரிக்கும். சிறுவர், பெண்கள், ஆண்களென்று அனைவரும் இந்தப் பிரித்தெடுக்கும் வேலையில் மகிழ்ச்சியாக சில போனது வந்ததுகளைப் பண்டுவம் பார்க்கும் வேலைகளும் தொடர்ந்து நடக்கும். இப்போது அவை விற்பனைப் பண்டங்களல்லவா. அப்புறம் அவற்றை வண்டிகளில் ஏற்றிச் சந்தைக்குக் கொண்டு செல்வார்கள். சில நேரம் வீடுகளே சந்தையாகிவிடும். சில இடங்களில், பானைகளைக் கயிற்றால் கழுதில் கட்டி, சுற்றிச் சுற்றிப் பூ வடிவத்தில் கட்டி, தலையில் சுமந்து சென்று கூவி விற்பார்கள்.
அப்படியான கூட்டுழைப்பில் உருவாகி வந்த மண்பாண்டம்

                                                                          குலாலர் தளம்