கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கும், ஔவையாருக்கும் இப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பர் ஔவையை "ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி!" என்று சொல்லிப் பொருள் கேட்டதாகவும் அதை 'அடீ' என்று தன்னைக் கேலி செய்து பாடியதாகக் கொண்டு ஔவை 'அடா!' என்று வருமாறு அமைத்து எதிர்ப் பாட்டாக கீழ்க்கண்ட பாடலைப் பாடியதாகவும் சொல்கிறார்கள்.
கம்பர் கேட்டது ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகளைப் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும். ஔவை அதற்கு விடை தருவது போலப் பாடுகிறார்:
"எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரை அடா சொன்னாய் அடா!
( எட்டேகால்- தமிழ் எழுத்தில் 'எட்டு'க்கு 'அ' என்றும், 'கால்' அளவைக்கு 'வ' என்றும் குறியீடு உள்ளது. அதன் படி, எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே! யமன் ஏறி வரும் எருமை மாடே! அழகு கெட்ட மூதேவி(பெரியம்மை)யின் வாகனமாகிய கழுதையே! முழுதும் மேலே கூரை இல்லாத குட்டிச் சுவரே! ராம தூதனாகிய குரங்கே! நீ சொன்னது ஆரைக்கீரையடா.)
இப்படியா கடுமையாக ஏசிக் கொள்வார்கள்? நமது நவீன எழுத்தாளர்களின் 'நாச்சியார்மட' ஏச்சு இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்!
கம்பரின் எதிரியான ஒட்டக்கூத்தருக்கும் இப்படி ஒரு ஏச்சு கிடைத்திருக்கிறது. குயவர் இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரை " நீ யாரடா?" என்று அகம்பாவத்தோடு கேட்க, அதற்குப் பதிலாக அவர் பாடிய பாடல் இது:
"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன் வந்து எதிர்த்தவன் யாரடா?' - என்று கேட்டதற்கு
"கூனையும் குடமும் குண்டுசட்டியும்
பானையும் வனை அங்குசப் பையல் யான்" - என்று பதில் வந்தது.
- 'மோனை முதலியவை நன்கு அமைந்த முத்தமிழ்க் கவிதைகளான மும்மதங்களையும் பொழிகின்ற யானையைப் போன்ற எம்முன் வந்து நின்ற நீ யாரடா?' என்று ஒட்டக்கூத்தர் கேட்க, 'நான் சால், குடம், குண்டுசட்டி, பானை முதலிய மண் பாத்திரங்களைச் செய்யும் அழகிய குயவன் ஆவேன்' என்று பதில் கிடைத்தது. 'அங்குசம் - அழகிய குயவன், யானைய அடக்கும் அங்குசம் போன்றவன் என்றும் பொருள்.