சென்னை, ஜன. 20-
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க வடசென்னை மாவட்ட மாநாடு இன்று நடந்தது. மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மண்பாண்ட தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாக்க, அரசு மண்பாண்டம் தொழில் செய்வதற்கான உதவியும், மண்பாண்டங்கள் செய்து சூளை வைத்த பிறகு அதனை வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் தொழிற்கூடங்களையும், விற்பனைக் கூடங்களையும் அரசு செலவில் கட்டித் தரவேண்டும்.
மண்பாண்டங்கள் செய்வதற்கேற்ற வகையில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின் சக்கரங்களையும் அதற்கான மின்சாரத்தையும், மாவட்டத்திற்கு 100 மின்சக்கரம் வீதம் அத்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
மத்திய அரசின் சென்ட்ரல் தொழிற்பயிற்சி நிலையத்திலும் தமிழக அரசின் தொழிற்பயிற்சியிலும் தையற்கலை, தச்சுவேலை பயிற்சி போன்று கலைநயமிக்க மண்பாண்டங்கள் செய்யவும் ஒரு பிரிவை உருவாக்கி பயிற்சி அளித்து மண் கலைஞன் என சான்று வழங்கி தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் அளித்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் ஹென்றி, பாவலர் கணபதி, எஸ்.என்.பழனி, ஆனந்த் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்.