குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, February 23, 2013

தமிழகத்தின் மண்பாண்டக் கலை

 மண் சார்ந்த கலை

    தமிழகத்தின் மண்பாண்டக் கலை மிகவும் பழைமை வாய்ந்ததாகும்.
கைத்திறனுடன் வண்ணம் கூட்டி மண்பாண்டம் செய்வதே ஒரு
கலையாக மாறிவிட்டது என்று கூறலாம். அகழ்வாராய்ச்சியில்
(Archaeology)
 தோண்டி எடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள்
மண்ணால் செய்யப்பட்டவையே என்பது இங்கு அறியத் தக்கதாகும்.
மண்சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை மணிமேகலைக்
காப்பியம் ‘மண்ணீட்டாளர்’ என்று குறிப்பிடுகிறது.
நுண்மாண்     நுழைபுலம் இல்லான் எழில்நலம்        மண்மாண் புனைபாவை அற்று
             (குறள் : 407)

என்று வளோர்களின் கலை நுட்பத் திறனைச் சிறப்பிக்கின்றார்
வள்ளுவர்.

    தமிழகத்தில் மண்ணாலான புழங்கு பொருட்கள், தெய்வ
உருவங்கள், குதிரைகள் போன்றவற்றைக் கலைத் திறனோடு செய்யும்
கைவினைஞர்கள் 
குலாலர், குயவர் என அழைக்கப் படுகின்றனர்.
மண் சார்ந்த தொழில்களே இவர்களது பூர்வீகமான குலத் தொழிலாகும்.குலாலர் இன மக்கள் அடுப்பு. மண் சட்டி, பானை, குளுமை
(தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை
அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து
வருகின்றனர். மேலும், தோண்டி, குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப்
பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான
பொருட்களையும் கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர்.

    பானைகள் ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டியாக விளங்கி
வருகின்றன. மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும்
மருத்துவப் பயன்பாடு மிக்கவை ஆகும். கைவினைக் கலைஞர் ஒருவர்
மண்ணிலேயே நாகசுரத்தை உருவாக்கி இசையோடு வாசித்தும் காட்டிச்
சாதனை செய்துள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.


சுடுமண் சிற்பங்கள்

    சிற்பக் கலைக்குரிய பத்துச் செய்பொருட்களில் மண்ணும் ஒன்று
என்பதைத் திவாகர நிகண்டு.
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிலுக் குறுப்பாவன

என்ற பாடலின் வாயிலாக எடுத்துரைக்கிறது.

    தெய்வங்களுக்கு மண் சிலை வடித்து வழிபடுவது தமிழகத்தில்
தொன்று     தொட்டு     இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக்
கோயில்களில் கம்பீரமாக அமைந்துள்ள அய்யனார், முனியப்பன்,
மதுரை வீரன், மாரியம்மன், முத்தாலம்மன், காளியம்மன்,
பேச்சியம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை, யானை,
காளை
 போன்ற தெய்வ வாகனங்களும் வளோர்களால் கலை
நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகின்றன.

    களிமண்ணை எடுத்து வந்து நன்றாகக் காயவைத்துக் கல், தூசி
நீக்கி, நீருற்றிப் புளிக்க வைத்து, ஆற்று மணல், வைக்கோல் சேர்த்து
மிதித்துக் குழைத்துப் பெரிய பெரிய தெய்வ உருவாரங்களும்
குதிரைகளும் செய்யப்படுகின்றன. பின்பு அவை நெருப்பில் போட்டுச்
சுடுமண் சிற்பங்களாக மாற்றப்படுகின்றன. வண்ணங்கள் பூசப்பட்டுக்
கோயிலில் நிலைநிறுத்தப் பட்டு வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன.
குதிரை ஓடுவது போன்றும் நிற்பது போன்றும் அதன்மேல் தெய்வங்கள்,
அரசர்கள் அமர்ந்திருக்கும் நிலையிலும் சிற்பங்கள் மண்ணாலேயே
வடிவமைக்கப் படுகின்றன. மண் சிற்பங்களில் விதவிதமான
ஆபரணங்கள் செய்தல், முக பாவங்களை அமைத்தல், உடல் நெளிவு
சுழிவுகளை அழகு படச் செய்தல் போன்றவற்றை வளோர்கள் கலை
நுட்பத்துடன் செய்து காட்டுகின்றனர்.

    கல்லால் சிற்பங்களை வடிப்பதற்கும் மண்ணால் சிற்பங்கள்
செய்யப் படுவதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அதாவது
கற்சிற்பங்கள் மேலிருந்து கீழ்நோக்கி உருவாக்கப்படும். ஆனால்
மண் சிற்பங்கள் கீழிருந்து மலோகச் செய்யப்படும். மேலும் கல்
சிற்பங்களில் வண்ணங்களைத் தீட்ட இயலாது. மண் சிற்பங்களில்
தேவையான வண்ணங்களைத் தீட்டி அழகுக்கு அழகு சேர்க்கலாம்.

    மண் சார்ந்த இக்கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்களாக
மட்டுமின்றித் தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் பிரிக்க
முடியாத கூறாகவும் அமைந்துள்ளன. சுடுமண் கலை வடிவங்களைத்
தெய்வங்களுக்கு நேர்த்திக் கடனாக வாங்கி வைத்து வழிபடும்
வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் உள்ளது. நோயினால் பாதிக்கப்
பட்டவர்கள் நோய் குணமடைவதற்குத் தெய்வத்திடம் வேண்டிக்
கொள்கின்றனர். நோய் குணமடைந்தவுடன் பாதிக்கப்பட்ட உடல்
உறுப்பினைப்     போன்று     மண்ணால் செய்து     அதனைத்
தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குகின்றனர்.
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
மண்சார்ந்த
கலைகள்
மரம்சார்ந்த
கலைகள்
ஓலைசார்ந்த
கலைகள்
காகிதம்சார்ந்த
கலைகள்
பிற
கலைகள்