குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Friday, June 13, 2014

களிமண்ணிலே கலைவண்ணம் படைக்கும் குலாலன்



மலேசிய நாட்டில் குலாலன்





ஆதியிலே கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கினார். அவனுள் உயிர்மூச்சை ஊதவே அவன் உயிருள்ளவன் ஆனான்’( ஆதி. 2/7) என்ற பைபிள் வசனம் களிமண்ணைப் பிசைந்து கடவுள் மனிதனைப் படைத்திருக்கும் உயிர் சம்பவத்தை விவரிக்கிறது.
களிமண்ணின் பயன்பாடு உலகத் துவக்கத்திலேயே இருந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் பாத்திரங்கள், மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பலவகையான மண்பானைகள், களிமண் ஜாடிகள் இதற்கு சாட்சியம் பகர்கின்றன.
களிமண் பானைகளில் கறி அல்லது குழம்பு சமைக்கையில் அதன் சுவையே தனி. தோட்டப்புறங்களில் தாய்மார்கள் விறகு அடுப்பில் சமைப்பதற்கு மண்பானைகளைப் பயன்படுத்துகையில் எழும் வாசம் பக்கத்து வீடுகளுக்கும் மணம் பரப்பும்.. இன்றைய நவீனக் காலத்தில் அலுமினியப் பானைகளை கேஸ் அடுப்பிற்கு அதிகம் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. இருந்தபோதும், பட்டணத்திலும் மண்பானையில் சமைக்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது.




மலேசிய நாட்டில் சில பகுதிகளில் மட்டும் களிமண் பானைகள் செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. அதில் கோலசிலாங்கூர், புக்கிட் ரோத்தான், அசாம் ஜாவா பகுதியில் ஒரு தமிழ் குடும்பத்தினர் களிமண் பானைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்தியர்கள் பொங்கல் திருநாளில் பானைகளைத் தேர்வு செய்து பொங்கலுக்கு பயன்படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாகும்.
அவர்களுடன் பொங்கல் நாளுக்காக மேற்கொண்ட நேர்காணலில் களிமண் பானைகள் செய்யும் தொழில் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
எவ்வளவு காலம் நீங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இது எங்கள் குடும்பத் தொழிலாக இருந்து வந்துள்ளது. எனது தந்தையார் வெங்கடாசலம் இத்தொழிலை செய்து வந்தார். அவரோடு சேர்ந்து களிமண் பானை செய்தல் தொழிலைக் கற்றோம். அவர் தனது 85-வது வயதில் காலமானப் பின்பு நாங்கள் இத்தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
உங்கள் குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
என்னுடைய பெயர் செல்லம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் 7 பேர். நான் குடும்பத்தில் 5-வது பிள்ளை. என் கணவர் திருநாகசெட்டியும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். என் 4 பிள்ளைகளில் மூவர் படித்து பட்டம் பெற்று பல துறைகளில் வேலை செய்கிறார்கள். 4-வது மகள் எஸ்பிஎம் படித்து வருகிறார். என்னுடன் பிறந்த சகோதரியும் சகோதரரும் மண்பாட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
மண்பானைகள் செய்யும் கலையை விவரித்து சொல்லுங்களேன்?
தேர்ந்தெடுக்கப்பட்ட களிமண்ணை 2 நாட்களுக்கு பெரிய தொட்டிகளில் ஊற வைப்போம். பின்னர் அதில் குறிப்பிட்ட அளவு மண் கலந்து 3 முறை இயந்திரத்தில் அரைக்க வேண்டும். பின்னர் களிமண்ணை அச்சில் கைகளால் வார்த்தெடுத்து தேவையான அளவுக்கு பானையை வடிவமைத்து வெய்யிலில் ஒருநாள் முழுவதும் காயவைக்க வேண்டும். மறுநாள் 500 பானைகளை ஒரே சமயம் அடுப்பில் வைத்து நெருப்பில் வேக வைக்க வேண்டும்.
ஏறக்குறைய 4 மணிநேரம் 800 சென்டிகிரேட் சூட்டில் பானைகளை வேக வைக்கணும். சூடு குறைவாக இருந்தால் மண்பானைகள் வேகாது. அடுப்பு சூடு அதிகரித்தாலும் பானைகள் உடைந்து விடும். எனவே இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பானைகளை வடிவமைப்பதில் பொறுமையும் நிதானமும் தேவை. ஒருநாள் முழுவதும் அடுப்பில் இருக்கும் பானைகளை மெல்ல எடுத்து, பின்னர் சாயம் அல்லது வர்ண ஓவியங்கள் தீட்டி விற்பனைக்கு வைப்போம்.
உங்கள் மண்பானைகளை எப்படி விற்பனை செய்கிறீர்கள்?
மலேசியா முழுவதும் மண்பானைகளை விற்பனைக்கு அனுப்புகிறோம். நாங்களும் நேரடியாக லோரியில் பானைகளை மொத்த வியாபாரிகளுக்கு அனுப்புகிறோம். சில்லரை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக பானைகளைக் கொள்முதல் செய்வதும் உண்டு.
நம் நாட்டில் உள்ள கோயில்களுக்கும் எங்களிடம் வந்து அகல்விளக்கு, நெய் விளக்குகளை வாங்குகிறார்கள். ஒரு மாதத்தில் ஏறக்குறைய 2,000 பானைகளைச் செய்கிறோம். ஒரு பானையின் விலை அதன் அளவை பொறுத்து 3 வெள்ளியிலிருந்து 10 வெள்ளிவரை விற்கப்படுகிறது.
6 அளவுகளில் மண்பானைகளைச் செய்கிறோம். இதை ஏ முதல் ஈ வரை என குறிப்பிடுகிறோம். மழைக்காலங்களில் மண்பானைகள் செய்வதில் சற்று சுணக்கம் ஏற்படும்.
மண்பானையில் சமைப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?
மண்பானையில் சமையல் செய்வதற்கு முன்னர் அதைப் பழக்க வேண்டும். இல்லையென்றால் மண்வாசனை குழம்பில் இருக்கும். மண்பானையில் தேங்காய்பூ போட்டு மெல்லிய சூட்டில் வறுக்க வேண்டும். பின்னர் சோறு வடித்த கஞ்சியை அதில் ஊற்றி மெல்லிய சூட்டில் சுண்ட செய்ய வேண்டும். இதை 3 நாட்களுக்கு செய்த பின்னர் பானையைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
களிமண்ணைக் கொண்டு எத்தகைய பானைகள் செய்கிறீர்கள்?
மண்பானை, மண் சட்டி, அகல் விளக்கு, நெய் விளக்கு, மோட்ச விளக்கு, தூபக்கல், கல்யாண பானை, தண்ணீர் பானை, லிங்கம் என பல வகையான மண்பாண்டங்களைத் தயாரிக்கிறோம்.
பொங்கல் நாளுக்கு பானைகள் தயாராக உள்ளனவா?
ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கல் விழாவிற்கு தேவையான மண்பானைகளைத் தயாரித்து வருகிறோம். பொங்கல் நாளில்தான் அதிகளவு பானைகள் விற்பனையாகும் என்கிறார் செல்லம்மாள்
தமிழர் வாழும் வீடுகளில் எல்லாம் பொங்கல் வைக்க கலை வடிவத்தில் பானைகளைச் செய்யும் குடும்பத்தினரின் தொழில் வளர்ந்து வருகிறது. மண்பானையில் சமைத்த உணவு நோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் மண்பானையில் சமையல் செய்தால் அதன் சுவையே தனி என்கிறார் செல்லம்மாள் கணவர் திருநாகச் செட்டி.
மண்பானைகளை நேரடியாக கொள்முதல் செய்து விற்க விரும்புகிறவர்கள் பாண்டு ரங்கன் (012-6441236), இராஜசேகர் (017-6699024), ஆகியோரோடு தொடர்பு கொள்ளலாம்.
‘பொங்கலோ பொங்கல்’, ‘பொங்கலோ பொங்கல்’ என ஆனந்தத்தோடு பொங்கல் பொங்கி வருகையில் சொல்கிறோம். அச்சமயம் பொங்கல் பானை செய்தவர்களையும் நினைவு கூருவோம்.

No comments: