குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Tuesday, February 26, 2013

மண்பாண்டக் கலையின் வளர்ச்சி


மண்பாண்டக் கலையின் வளர்ச்சி


முன்னுரை

மட்பாண்டம் என்ற சொல் மண்ணால் உருவாக்கப்படும் பொருட்களைக் குறிக்கும். அவ்வாறு மண்ணால் பொருட்களை உருவாக்கும் இத்தொழில் மட்பாண்டக் கலை எனப்படும். "கண்ணுக்குப்புலப்படாத நுண்தொலைகளுள்ள (Porous) பாண்டப்பொருள் அனைத்தும் பாண்டங்கள் எனப்படும்" எனக் கலைக் களஞ்சியம் விளக்கம் தருகிறது. இதன் மூலம் பாண்டம் என்பது மட்பாண்டத்தைக் குறிக்கிறது.
மட்பாண்டக் கலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் பண்பாட்டின் எச்சங்களாகவும் காணக்கிடைக்கின்றன. "ஹரப்பா மொகஞ்சதாரோவின் காலம் கி.மு. 3200-க்கும் 2500க்கும் இடைப்பட்டது" என்பர். ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மட்பாண்டங்களைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் ஹரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வின் மூலம் கண்டுணர்த்தப் பட்டிருக்கிறது. மனிதன் அழிந்து போகக் கூடியவன். அவனால் படைக்கப்படும் படைப்புகள் கலை வடிவில் காலந்தோறும் நிலைபெற்றுக் கொண்டிருப்பவை.
"மட்பாண்டக் கலையின் தோற்றம் வளர்ச்சியினைப் பரந்துப்பட்ட நோக்கில் ஆராயும் முகமாக அதன் பொதுக்கலைத் தன்மையினையும் அதனின்று அது நுண்கலையாக வளர்ச்சி பெற்றமையும், இதன் தொடக்க காலம் முதல் இக்காலம் வரை இன்ன பிற கலைகளோடு பெற்று வந்துள்ள தேர்ச்சியையும், வளர்ச்சியையும் பற்றிக் கூறுவதாய் இக்கட்டுரை அமைகிறது.
மட்பாண்டம் பற்றிய தமிழகக் கண்ணோட்டம்
தமிழகத்திலேயும் மட்பாண்டக்கலை தொன்மைக் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். இலக்கிய இலக்கணங்களில் மட்பாண்டங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருப்பதைக் காணும்போது அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவை புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிகிறது.
"தமிழ் மக்களது படைப்பு விலங்கு வடிவில் உள்ள கட்ட மண்ணாலாண தாழிகளும், தாழிகளுள் சில கலைப்பொருள்களுமாகக் கிடைத்துள்ளன" மட்பாண்ட வரலாற்றின் தொன்மையை ஆராய்பவர்கள் ஆதிச்சநல்லூர் புதை பொருட்களைக் காட்டுகின்றனர்.
சிற்பக்கலைக்கு உரிய பத்து செய்பொருட்களில் மண்ணும் ஒன்றென்பதைத் திவாகர நிகண்டும் சுட்டுகிறது.
"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் கதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிலை
பத்தே சிற்பத் தொழிற் குறுப்பாவன"
மேலும் சங்க இலக்கியங்களான புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை போன்றவற்றிலும் இன்னபிற இலக்கியங்களிலும் மட்பாண்டம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அதற்குப் பின்னால் வந்த காலங்களிலும் படைப்பின் தரமும், கலை நயமும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. "சென்னை மாநிலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் கிரிகிரி என்ற ஊரில் செய்தவை பல அகில உலக பொருட்காட்சிச் சாலைகளில் பாராட்டு பெற்றுள்ளன. மதுரையில் செய்யும் கருநிற மட்பாண்டங்கள் மிகச் சிறந்தவை. சேலத்தில் ஓவியம் வரைந்த மட்பாண்டங்கள் தயாராகின்றன."
"தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் பழைய பாவைகள், விலங்குகள், மனிதர்கள் முதலியன அலங்கரிப்புள்ளவை. (முதுமக்கள் தாழிகள் என வழங்கும் சவப்பானைகளோடு கிடைத்த பானைகளில் கோயமுத்தூர் ஜில்லாவில் கிடைத்த மெருகுகொடுத்த பானைகள் விசேஷமாகக் கருதப்பட்டன" என்ற செய்திகளும் உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் கருப்பு, சிவப்பு நிறப் பாண்டங்களே செய்யப்பட்டிருக்கின்றன. ஏனை கிரேக்க ரோமனிய நாடுகளைப் போல் பச்சை, நீலம் நிறமுடைய பாண்டங்கள் இருத்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் சக்கர உதவியினால் நேர்த்தியான பானைகளை வனைந்திருக்கின்றனர். "மலையாள ஊராளிக் குறும்பர், சிங்களத்திலுள்ள வேடர்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்கள், சைபீரிய யாகுட்சுகள் போன்றோர் சக்கர உதவியின்றியே பானை வனைந்தனர்" என்ற செய்தி கிடைக்கிறது.
"தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவலூர் வட்டம் கீழ்வாலை என்னும் ஊரிலுள்ள வெவ்வேறு மூன்று குன்றுகளின் குகைப் பகுதிகளிலும், குன்றைச் சூழ்ந்துள்ள புன்செய் நிலப்பகுதிகளிலும், கருப்புறிச்சுடுமண் ஓடுகளும், மெல்லிய வழுவழுப்பான சிவப்பு மற்றும் கருப்பு நிற ஓடுகளும் முதுமக்கள் தாழிகளின் உடைபாடுகளும் பெருமளவு சிதறிக் கிடக்கின்றன. இவையனைத்தும் கி.பி. 1,2 - ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை எனக் கொள்ளலாம்". எனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மட்பாண்டக்கலை தோற்றம் பெற்றிருக்கின்றது என்பதை அறிய முடிகிறது.
தமிழகத்தில் மட்பாண்டக்கலையின் வளர்ச்சி
தமிழகத்தின் மட்பாண்டக் கலை வளர்ச்சியினைப் பற்றி ஆராயுமிடத்து மட்பாண்டக்கலை - பொதுப்படைப்பு, மட்பாண்டக்கலை நுண்படைப்பு என்ற இருபெரும் பகுதிகளாகப் பாகுபடுத்திப்பார்த்தல் பயன்தரும். ஏனெனில் முன்னது வாழ்வியற் பயன்பாடுடையதாகும் பின்னது கலை முருகியல் உணர்வும் இன்பத்தையும் அளிப்பதாய் உள்ளன.
மட்பாண்டக்கலை - பொதுப்படைப்பு
மனித வாழ்க்கைக்குப் பயன்படும் விதத்தில் அமைந்த தொழிலையே பொதுக்கலை என்று பார்த்தோம். தேவை என்ற பயன்பாட்டு நிலையிலேயே ஆரம்பகாலத்தில் இக்கலை இன்றியமையாத சேவைகளில் ஒன்றாகப் பயன்பட்டிருக்கின்றன. மட்பாண்டம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் சுரைக்குடுக்கை, பாறை இடுக்குகள் போன்றவற்றில் நீரைச் சேமித்து வைத்தான் என்ற செய்தியை அறிவதன் மூலம் மட்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின் பயன் கருதிய நிலையிலேதான் வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும் என்பதை ஊகிக்கவியலும். அக்கால கட்டத்தில் இக்கலையின் இன்றியமையாமை உணரப்பட்டுமிருந்த அளவிலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவிலும் சுமார் ஐந்து மைல் தொலைவிற்குள் ஒரு குயவரையாவது காண முடியும் என்பதனின்று இக்கலையின் தேவையை அறிந்துகொள்ள இயலும். வேளாண்குடி மக்களிடையே புழக்கத்திலுள்ள மட்பாண்டங்களாலும் இதை நிறுவலாம்.
அறிவியல் வளர்ச்சியினால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில்வர், ஈயம் போன்ற இன்னபிற பாத்திரங்கள் வருகைக்கு முன் மட்பாண்டங்களே அதிகம் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. மனிதன் பிறந்தது முதல் அவனது இறப்புவரை சில மட்பாண்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. தண்ணீர் குடிக்க, உணவு சமைக்க, சாப்பிட, தானியங்கள் சேமிக்க என பல நிலைகளில் பயன்பாடுடைய பொதுக்கலையாகப் பல்வேறு வடிவமைப்புகளில் இக்கலை வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.
மட்பாண்டக்கலை - நுண்கலை படைப்பு
நுண்கலை, பொதுக்கலையிலிருந்து வேறுபட்டதும் வரலாற்று அடிப்படையில் பிற்பட்டதும் ஆகும். கலைநயமும், நேர்த்தியும், வேலைப்பாடும் மிகுந்த படைப்புகளை நுண்கலை என்கிறோம். மட்பாண்டக்கலையைப் பொறுத்தவரை நுண்கலைப் படைப்பு மேற்சுட்டிய சிறப்புகளை உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது. இது கண்ணால் கண்டும் மனத்தால் உணர்ந்தும் மகிழத்தக்கது. பயன்பாடு என்ற தேவை நிலையிலிருந்து மாறி உணர்வுப் பூர்வமான நுண்கலை தோன்றுவதாயிற்று.
"பண்டைக்கால எகிப்தியர்கள் பொதுக்கலையிலிருந்து படிப்படியாக விலங்குகள், தெய்வ உருவங்கள், இயற்கைப் பொருட்கள் போன்றவற்றைப் படைக்கலாயினர்" என்ற ஆங்கில நூற்குறிப்பு இதை உணர்த்தும், மனிதன் தன்னுடைய அறிவினாலும், மனோபாவத்தாலும், கற்பனையாலும் நுண்கலையைப் படைக்கலானான். அதன் மூலம் கிடைக்கப்பெறும் உணர்வால் மகிழ்வையும் ஆன்மீக நிறைவையும் அடைந்தான்.
பொதுக்கலையாகத் தோற்றம் கொண்ட கலை காலப்போக்கில் நுண்கலையாகவும் பயின்று வருதல் கூடும். தண்ணீர் முகந்து குடிக்கக் குவளை பயன்படுகின்றது. இது பொதுக்கலை, அக்குவளை கழுத்துப்பகுதி, கைப்பிடி, வாய்ப்பகுதி வேலைப்பாடமைந்த கலைநயம் வாய்ந்ததாகக் காட்சி தருமாயின் அதுவே நுண்கலைத் தன்மையையும் பெற்றுவிடுகின்றது.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் இக்கலை சிற்பக்கலை வடிவிலேயேயும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. தெய்வம், மனிதர், விலங்கு, பறவை முதலிய வடிவங்களைக் கற்பனை உருவங்களாக அமைத்து வழிபாட்டுப் பொருள்களாகப் போற்றி வந்தனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சிறுதெய்வ வழிபாடு நடந்து வந்து கொண்டிருப்பதனால் இக்கலை மேலும் வளர்ச்சி தேர்ச்சியும் பெறுவதாயிற்று. "பல வண்ணங்களின் வடிவங்களிலும் தயாரிக்கப்படும் பாண்டங்கள் கண்ணையும் கருத்தையும் கவருவதுடன் அன்றாட வாழ்வின் அவசியத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. நாட்டுப்புறக் கலைகள் (கைவினை) பாரம்பரியத்தின் படிவங்களாகும். குடும்பச் சொத்துக்களாக வாழையடிவாழையென வந்த வம்சா விருத்திகளாகவும் விளங்குகின்றன".
மட்பாண்டக்கலை என்பதற்கேற்றாற் போல், வாழையடிவாழையாய் பல புதிய நிலைகளில் வடிவமைப்பு, வர்ணம் தீட்டுதல் கலைநயம் முதலிய நுண்கலைத் திறமைகளுடன் வளர்ச்சி பெற்று வந்து கொண்டுள்ளது.
மட்பாண்டக்கலையும் பிற கலைகளும்
மட்பாண்டக் கிராமியக் கைவினைக் கலைக்குப் பெருமை சேர்ப்பதாய் இருப்பதோடு பிற கலைகளோடும் பொருத்திப் பார்க்கும் வகையில் பயனுடையதாய் அமைவதைக் காணலாம். அறிவியலின் முன்னோடியாகவும் இது திகழ்கிறது. "சக்கரத்தையும் துடுப்பையும் கண்டுபிடித்தவர்கள் தாம் தொழில், அறிவியல் ஆகியவற்றின் வரலாற்றின் முன்னோடிகளாவார்கள்" என்பர் அறிஞர். அவ்வகையில் இக்கலை இசை, கல்வி, ஓவியம், சிற்பம், மருத்துவம் எனப் பல கலைகளுக்கும் பயன்பட்டு வந்திருக்கின்றது.
அறிவியல்
சக்கரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் இக்கலை அறிவியலுக்கு முன்னோடியாகவும், மனித இனம், நாகரிகம் ஆகியவற்றை அறிந்து கொள்ளப் பேருதவியாக இக்கலை சான்றாதாரமாகப் பயன்படுகிறது.
கல்விக்கலை
கல்விக்கு முன்னோடியாக இருந்தது மட்பாண்டக்கலையே எனலாம் "பாபிலோன் மற்றும் ஆரியர்கள் முதலானோர் மட்பாண்டங்களில் எழுத்து முறையைப் பயன்படுத்தியதாகத் தெரிய வருகிறது. அம்மக்கள் பெரும்பாலும் ஈரமான மட்பாண்டங்களில் எழுதி வைத்தனர்". களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப் போல் அமைத்து அப்பலகையின் ஈரம் உலர்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலர வைத்துப் புத்தகமாக உபயோகித்திருக்கின்றனர் என்ற செய்திகளின் மூலம் களிமண் சுவடியாக இக்கலை கல்விக்கலைக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இசைக்கலை
இசைக்கருவிகளும் மண்ணினால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. புல்லாங்குழல், நாதசுவரம், மிருதங்கம் (கடம்), தாளப்பானை, மண்முழவு, உடுக்கை போன்ற கருவிகள் மண்ணால் செய்யப்பட்டவை.
"கஞ்சத்தால் செய்வது குமுழவம்
கருங்காலியால் செய்வது இடரிகை
செங்காலியால் செய்வது சல்லி
வேம்பாற் செய்வது மத்தளம்
போன்று சல்லி, இடக்கை ஒழித்த மற்ற கருவிகளெல்லாம் இவை ஒன்றும் பெறாத காலத்து மண்ணாற் செய்வது உத்தமம்" என்று ஆளவந்தார் தம் நூலில் ஆய்ந்து கூறியுள்ளார். கொசவன்பட்டி என்னும் ஊரில் இன்றும் மாரியம்மன் கோயிலில் "மண்முழவு" பயன்பட்டு வருவதைக் காணலாம்.
ஓவியக்கலை
வர்ணங்கள் தீட்டுவதற்கும் மண் ஒரு கலவைப் பொருளாகப் பயன்பட்டிருக்கின்றது. இன்றளவிலும் நாட்டுப்புறங்களில் உள்ள குயவர்கள், சாமி சிலைகள், குதிரைகள் போன்ற சிலைகளுக்கு மண்கொண்டு வர்ணம் தீட்டுவதையும் வேலைப்பாட்டிற்காகக் கோலமிடுவதையும் காண முடிகிறது. கோயில்களில் மதிற்சுவர்களிலும், வீடுகளிலும் மண் ஒரு வர்ணக் கலவையாகப் பயன்படுத்தப் படுகிறதை அறியலாம்.
சிற்பக்கலை
சிற்பக்கலை வளர்ச்சி பெறுவதற்கு முற்பட்ட தொடக்க காலங்களில் மண்ணைக் கொண்டுதான் சிற்பம் செய்திருக்கக்கூடும். இரும்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மரத்தாலும், கல்லாலும் சிலை செய்திருக்கக்கூடும். இன்றளவிலும் மண்ணைக் கொண்டுதான் குயவர்கள் சிலையைச் செய்கின்றனர். மாறாக ஒன்று சிமெண்டு உதவிகொண்டு சிலை செய்யத் தலைப்பட்டு அதில் வளர்ச்சி பெற்றிருப்பினும் சிலை உருவாக்கத்தின் முன்னோடியாக இருப்பவை மட்சிலைகளே.
மருத்துவக்கலை
மண்ணிற்குச் சில மருத்துவக் குணங்கள் உண்டு. "மண்பாண்டச் சமையல் ருசியான உணவாக இருப்பதுடன் குடற்புண் போன்ற நோய்கள் வராமல் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக இருக்கச் செய்கிறது. "சித்த மருத்துவத்தில் மண் மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறதை அறிய முடிகிறது. "தலைவலி, கண்நோய், உடல்சூடு, கை கால் வீக்கம், முடி உதிர்தல் , பொடுகு, தேமல், சிரங்கு, படை போன்ற நோய்களை மண் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்" என்பர். எனவே மண் மருத்துவக் கலைக்கும் பயனுடையதாய் உள்ளது.
கட்டிடக்கலை
செங்கல் என்றாலே அது மண்ணைத்தான் குறிக்கும். கோவில் கோபுரங்களையும், மாட மாளிகைகளையும் செங்கற்களாற்றான் எழுப்பினர். "சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சி செய்த வரலாற்றாளர்கள் அதன் காலத்தை கி.மு. 3200-க்கும் கி.மு. 2500-க்கும் இடைப்பட்டது என்று கூறக் காண்கின்றோம்.". சிந்து சமவெளியில் சுட்ட செங்கற்களான வீடுகளையும், கட்டட அமைப்புகளையும் அறியப் பெறுவதனின்று அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மண் கட்டிடக் கலைக்கும் பயன்படுமாற்றை இதனால் அறியப்பெறும்.
மண்பாண்டக் கலை மனிதக் கரங்கொண்டு சக்கரத்தின் உதவியோடு படைக்கப்படும் கைவினைக்கலை என்பதை அறிவோம். இக்கைவினைக்கலையால் உருவாக்கப்படும் மட்பாண்டங்கள் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பின்மையால் நலிவுற்றுப் போகும் போக்கையும் உணர முடிகிறது. ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்புகளினாலும், மக்கள் விரும்பும்படியாகவும் புதிய எந்திரத்தயாரிப்பு, புதிய கலவைகள், புதிய வர்ணங்கள் போன்றவை மூலம் புதிய படைப்புகளைப் படைக்குமளவிற்கு இக்கலை ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
மேற்கூறப்பட்டவை மூலம் மட்பாண்டக்கலையின் தோற்றம், தொடக்க காலத்தில் தேவை அடிப்படையில் பொதுக்கலையாகவும், பின்னர் நுண்கலையாகவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதை அறிய முடிகிறது. இதன் தோற்ற காலம் கி.மு. 3500 க்கும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. சக்கரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே சூளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் உலகளாவிய நிலையில் இக்கலை சில பொதுமைகளை கொண்டிலங்குகின்றது என்பதும் புலனாகிறது