குலாலர் தளதில் உள்ள விளம்பரத்தைப் திரந்து பாருங்கள் குலாலர் தளதின் வளர்ச்சிக்காக உதவுங்கள்

Saturday, June 1, 2013

குலாலமன்னர்களின் மைசூர் அரண்மனை

குலாலமன்னர்களின் சின்னமாகத் திகழும் மைசூர் அரண்மனை

குலாலமன்னர்களின் மைசூர் அரண்மனை


மைசூர், தென் இந்தியாவுக்குள் நுழைந்ததும் அனைவரும் காண விழையும் நகரம் மைசூர். பட்டு, மல்லிகை, சந்தனம், ஊதுவத்தியை நினைத்தாலே நினைவுக்கு வரும் மைசூரில், அனைவரும் காணத் துடிக்கும் கட்டடம் உடையாரின் அம்பாவிலாஸ் அரண்மனை.

தசராவிழா, மன்னர் குடும்பத் திருமணங்கள், மன்னர்களின் வரலாற்றுச் சந்திப்புகள், நவராத்திரி விழா போன்றவற்றுக்குப் புகழ்வாய்ந்த மைசூர் அரண்மனையை ஆண்டுதோறும் 15 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள்.


68 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அரண்மனையின் அழகை, 96 ஆயிரம் பல்புகளின் ஒளிவெள்ளத்தில் காணக் கண் கோடி போதாது. மைசூருக்கு வரும் எவரும் தவறாமல் காணும் அரண்மனையின் செங்கற்களில் இழையோடும் சோகக்கதை அனைவரின் இதயத்தையும் பிழிந்துவிடும்.

17-ம் நூற்றாண்டில் இந்த இடத்தில் அமைந்திருந்த அரண்மனையில் உடையார் மன்னர்கள் வசித்து வந்தனர். ஆட்சியைக் கைப்பற்றிய ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான், உடையார்களின் சுவடு தெரியாமல் மைசூர் நகரை அழித்ததோடு, அரண்மனையையும் தரைமட்டமாக்கினார்.

மைசூர் நகரில் நாசர்பாத் என்ற புதிய நகரை உருவாக்க திப்புசுல்தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் 1799-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களுடனான 4-வது மைசூர் போரில் திப்புசுல்தான் உயிரிழந்தார். மைசூர் அரசாட்சி மீண்டும் உடையார்களின் கைக்கு திரும்பியது. உடையார்களுக்கு அரண்மனை இல்லாததால், சிறிய வீட்டில் 1799-ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
கிருஷ்ணராஜ உடையார் 


மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மரத்தினாலான பிரம்மாண்டமான அரண்மனையை கட்டினார். அதில் ஆயுதச்சாலை, நூலகம், அலுவலகம், திருமண மண்டபம், தனி அறைகள், உணவறை, கூட்ட அரங்கு ஆகியவை அமைத்து, மிகப்பெரிய நுழைவு வாயிலைக் கட்டினார். 245 அடி நீளம், 156 அடி அகலம், 145 அடி உயரத்தில் கட்டப்பட்ட அரண்மனைக்கு உயரமான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

ராணி கெம்பராஜமம்மணி தலைமையில், இளவரசி ஜெயலட்சுமம்மணி மற்றும் இளவரசர் எம்.காந்தராஜ் அர்ஸ் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அன்று மாலை அகல்விளக்கு கீழே விழுந்து தீ பற்றியதில் அரண்மனை முழுவதும் எரிந்து சேதமானது. திருமணமண்டபம், அம்பாவிலாஸ், ராமவிலாஸ் அரண்மனை ஆகியவை தீயில் கருகி தரைமட்டமானது.

பெங்களூரில் இருந்து தீயணைப்புப் படையினர் வருவதற்குள் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ஆயுதங்கள், சிம்மாசனம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் மனம் நொந்திருந்த கெம்பராஜமம்மணி, ஷிம்லாவில் உள்ள வைஸ்ராய் மாளிகையைப் போன்றதொரு அரண்மனையை மைசூரில் கட்டுவதற்கு வருமாறு எச்.இர்வின் என்ற ஆங்கிலேயருக்கு அழைப்பு விடுத்தார்.


மயில்தொட்டி, திருமண மண்டபம், மயில் அரங்கம், கண்ணாடிக்கூரை, பளிங்குத்தரை, மின்தூக்கி, ஆயுதச்சாலை, நூலகம், கூட்ட அரங்கம், தர்பார் மண்டபம், அறைகள் கொண்ட 3 அடுக்கு அரண்மனையை ஹொய்சளர் மற்றும் கிரேக்கக் கட்டடக் கலைப்படி, 1897 அக்டோபர் முதல் 1912-ம் ஆண்டுவரை 15 ஆண்டுகளில் இர்வின் கட்டி முடித்தார்.

இதில் 5 அடுக்கு கோபுரமும், தங்கத்தால் பூசப்பட்ட குவிந்தக்கூரையும் (டூம்) உண்டு. வாஸ்து காரணத்துக்காக அரண்மனையில் சில வடிவங்கள் 1932-ல் மாற்றியமைக்கப்பட்டது. இப்படி அழகைக் கொட்டி வடிக்கப்பட்ட எழில் கொஞ்சும் அரண்மனையைதான் இப்போது நாம் காண்கிறோம். கால வெள்ளத்தில் உடையார் ஆட்சி மறைந்தாலும், ஆட்சியின் மிச்சத்தை இன்னும் நினைவூட்டும் அரண்மனை மட்டும் வரலாற்றுச் சின்னமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.


உடையார்களின் அடையாளச் சின்னமாகத் திகழும் அரண்மனையின் நூற்றாண்டு விழாவை அக்டோபரில் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.